சட்டப்பேரவையில் நேற்று, தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு உரிமம் வழங்கும் முறையை எளிதாக்கி, ஆன்லைனில் வழங்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, நிதி ஒதுக்கம் தொடர்பான 4 சட்ட மசோதாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.
ஏற்கெனவே, தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தைக் குறைக்க, அறிவியல்சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் ஏற்படுத்துவது குறித்த தீயணைப்பு சட்டத்திருத்த மசோதா, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல், சொத்துவரி நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதத்தை ஒரு சதவீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைப்பது உள்ளிட்ட 2 மசோதாக்களை அமைச்சர் கே.என்.நேருவும், ஊரக உள்ளாட்சிகளில் விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள், விளம்பர அட்டைகள் நிறுவுவதை முறைப்படுத்தும் வகையிலான மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்களை அமைச்சர் ஐ.பெரியசாமியும் தாக்கல் செய்திருந்தனர்.
இதுதவிர, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பினர் செயலரை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) பதவிவழி செயலராக சேர்ப்பதற்கான மசோதா மற்றும் உயிரி மருத்துவக்கழிவுகளை கொட்டுவோரை தண்டிக்கும் சட்ட மசோதாக்கள் அமைச்சர் சு.முத்துசாமி ஏற்கெனவே தாக்கல் செய்திருந்தார்.
இதுதவிர, ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா மற்றும், ஆவணப்பதிவின்போது மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் ஆகியற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அசல் உரிமை மூல ஆவணத்தை பதிவின்போது தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தும் சட்ட மசோதாக்களை அமைச்சர் பி.மூர்த்தியும், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசனும், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை புதிதாக உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கோவி.செழியனும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மசோதாக்கள் அனைத்தும் நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்ட மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): வங்கிகளில் சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் சொத்து அடமானம் இன்றியும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் அதிக அளவிலான கடன்களை எளியோர்களுக்கு குறைந்த வட்டியில் வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
வேல்முருகன் (தவாக): கல்விக் கடன்களையும் இந்த சட்டத்தில் இணைத்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
சின்னத்துரை (மார்க்சிஸ்ட்): இத்தகைய வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கடன்தாரர்களை காப்பீடு போடுவதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது.
இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசும்போது, ‘‘உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.
கலைஞர் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு தொடர்பாக எம்.எச். ஜவாஹிருல்லா (மமக) பேசும்போது, ‘‘தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஏராளமாக உருவாகி வருகின்றன. அவை மாநில அரசின் சட்டங்களுக்கு கட்டுப்படுவது கிடையாது. எனவே, நிகர்நிலை பல்கலைக்கழங்கள் அனைத்தையும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் ஒரு சட்ட முன்வடிவு அவசியம்’’ என்றார்.
சிந்தனைச்செல்வன் (விசிக) பேசும்போது, ‘‘எதிர்காலத்தில் மொழியியல், சமூகநீதி, விளிம்புநிலை மக்கள் தொடர்பான ஆய்வுகள் நடைபெறும் பல்கலைக்கழகமாக அமைய வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட முன்வடிவு குறித்து உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசும்போது, ‘‘இந்த சட்ட திருத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராதக் கட்டணம் அதிகமாக இருப்பதால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே அதை குறைக்க வேண்டும்” என்றார். நிறைவாக, 18 சட்ட மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
எதிர்க்கட்சி தலைவர்களுடன் கைகுலுக்கிய முதல்வர்: தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
சட்டப்பேரவை அலுவல்கள் பிற்பகல் 3.30 மணியளவில் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இருக்கையில் இருந்து எழுந்து பேரவையின் முன்வரிசைக்கு சென்று, சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு பார்க்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்களின் இருக்கைக்கே சென்று முதல்வர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.