காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா தாக்குதலை தலைமையேற்று நடத்தியுள்ளார் என்று இந்திய உளவுத் துறை, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தில் எஸ்எஸ்ஜி என்ற சிறப்பு கமாண்டோ பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவை சேர்ந்த கமாண்டோக்கள் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் காஷ்மீரின் காந்தர்பால் பகுதியில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வெளிமாநில தொழிலாளர்கள், ஒரு மருத்துவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் எஸ்எஸ்ஜி படையின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா தலைமையேற்று நடத்தியது தெரியவந்தது. தற்போது காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையும் அவரே தலைமையேற்று நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தாக்குதலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சதித் திட்டத்தை தீட்டி, லஷ்கர் இ தொய்பா மூலம் செயல்படுத்தி இருக்கிறது. இவ்வாறு உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரோன்கள் மூலம் ஆயுதம்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணை குறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தின் எஸ்எஸ்ஜி படையின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா கடந்த ஓராண்டாக காஷ்மீரில் பதுங்கி உள்ளார். அவரது தலைமையிலான தீவிரவாதிகளே பஹல்காமில் தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தீவிரவாதிகளின் வரைபடங்கள் வரையப்பட்டு உள்ளன. அதில் ஒரு வரைபடம், எஸ்எஸ்ஜி முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசாவின் புகைப்படத்துடன் 100 சதவீதம் ஒத்துப் போகிறது. அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க தயாரிப்பான எம்4ஏ1 ரக துப்பாக்கி, ஜெர்மனி தயாரிப்பான எச்கே416 ரக துப்பாக்கி மற்றும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். இவை பாகிஸ்தான் ராணுவத்திடம் மட்டுமே உள்ளன.
காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு தேவையான பணத்தை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு கிரிப்டோகரன்சி மூலம் அனுப்பி வருகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்துவதற்கு தேவையான பணமும் கிரிப்டோகரன்சி மூலமே அனுப்பப்பட்டு உள்ளது.
பஹல்காமில் வேவு பார்த்து தகவல் தெரிவிக்க உள்ளூரை சேர்ந்த சிலருக்கு பெரும் தொகையை தீவிரவாதிகள் வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ட்ரோன் பறந்திருக்கிறது. இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக குதிரை ஓட்டும் சிலர், தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லையை ஒட்டிய 5 பகுதிகளில் ஐஎஸ்ஐ உளவாளிகள் முகாமிட்டு, தீவிரவாதிகளுக்கு அவ்வப்போது உத்தரவுகளை வழங்கி உள்ளனர். இருதரப்பினரும் சீன தயாரிப்பு செயற்கைக்கோள் போன்களை பயன்படுத்தி உள்ளன. இருதரப்பு இடையிலான தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் தொடர்பான விவரங்களைப் பெற இஸ்ரோவின் உதவியை நாடி உள்ளோம். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.