மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மதுரை தல்லாகுளத்தில் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார பேரணி நடந்தது. அப்போது தல்லாகுளத்திலிருந்து அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணி சென்றனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சியர் காரில் சென்று பேரணியை சீர்குலைக்க முயற்சி செய்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
அதனைக் கண்டித்தும், கட்சிக்கொடி ஏற்றுவது தொடர்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றக்கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்கட்சியினர் நேற்று தல்லாகுளத்தில் ஆட்சியரை பணியிட மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டி தலைமையில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, சசி, கலைவாணன், முத்தமிழ் பாண்டியன், குமார் வளவன், ஈழவளவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது. இதில் 100 பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
–