நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கேரள ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் துறைமுக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்னர் விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.
அப்போது துறைமுகத்தில் நின்ற பிரமாண்ட சரக்கு கப்பலான எம்எஸ்டி செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது. இதுவரை, இந்தியாவின் 75 சதவீத டிரான்ஷிப்மென்ட் நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாக நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது
விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்.
கடந்த மாதம் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் ஆண்டுக்கு 50 லட்சம் கண்டெய்னர் கலன்களை (டிஇயு) கையாளும் திறன் கொண்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர்ரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனேவால், மத்திய அமைச்சர்கள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக அமைச்சர் வி.என். வாசவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர், அதானி குழும தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதானி குழுமத்துடன் இணைந்து இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழிஞ்சம் துறைமுகமானது பொது-தனியார் ஒப்பந்த (பிபிபி) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது திட்டம் தீட்டுதல், கட்டப்படுதல், நிதியளிக்கப்படுதல், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுதல், அதன் பின்னர் திரும்ப ஒப்படைத்தல் (டிபிஎஃப்ஓடி) என்ற அடிப்படையில் செயல்பாட்டில் இருக்கும். ஆண்டுதோறும் 50 லட்சம் கண்டெய்னர்கள் (20 அடி கண்டெய்னர்கள்) கையாளும் திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதானிக்கு புகழாரம்: விழாவில் பேசும்போது பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானியை பாராட்டிப் பேசினார்.
அவர் பேசும்போது, “விழிஞ்சத்தில் அற்புதமான துறைமுகத்தை கட்டிக் கொடுத்துள்ளார் தொழிலதிபர் அதானி. தற்போதுதான் துறைமுகத்தை நான் சுற்றிப் பார்த்தேன். மிகச்சிறந்த முறையில் இந்த துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தின் வளர்ச்சிக்கு அதானி உதவி வருகிறார். ஆனால், குஜராத்தில் இதுபோன்ற சிறந்த துறைமுகத்தை அவர் அமைக்கவில்லை.
ஏன் இதுபோன்ற துறைமுகத்தை குஜராத்தில் அமைக்கவில்லை என்று குஜராத் மக்கள் அவர் மீது கோபம் கொள்ளப் போகின்றனர். எனவே, அவர் குஜராத் மக்களின் கோபத்தைச் சந்திக்க அவர் தயாராக வேண்டும்” என்றார். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதும் கூட்டத்தில் பலத்த சிரிப்பலையும், கைதட்டலும் எழுந்தது.
பலரின் தூக்கம் பறிபோகும்: விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, இண்டியா கூட்டணியின் தலைவர்கள் சிலர் இந்த மேடையில் அமர்ந்துள்ளதால் பலரின் தூக்கம் பறிபோகும் என்றார்.
அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரஸின் மூத்த தலைவர் சசிதரூர் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். அதனால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்னுடன் மேடையை பகிர்ந்து கொண்டிருப்பதால் பலருக்கு தூக்கமில்லாத இரவுகள் ஏற்படும் என்று நினைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்