திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆம்னி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜிநாத் (25), ராஜேஷ், (30), ராகுல் (29), சுஜித் (25), சாபு (25), சுனில் (35), ரஜினிஷ் (40). இவர்கள், திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள்.
நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இந்த ஆம்னி வேனை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகப்பட்டினத்தில் இருந்து, சாயல்குடி நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆம்னி வேன் முற்றிலும் சேதமடைந்தது. அதில் பயணித்தவர்களில் சாஜிநாத், ராகுல், சுஜித், ஆம்னி வேனை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சாபு, சுனில், ரஜினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த விபத்து குறித்து பாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.