சென்னை: மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பயணிகளிடம் ஆன்லைன் மற்றும் க்யூஆர் குறியீடு மூலமாக கருத்து கேட்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) நடத்தி வருகிறது.
சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வரையும் என 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதற்கிடையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமும் நிறைவேறி ரயில் சேவை தொடங்கும்போது, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்தவும், சிறந்த சேவை வழங்கவும் பயணிகளிடம் கருத்து கேட்கும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்துகிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த, ஆண்டுதோறும் https://chennaimetrorail.org/ தளத்தில், கருத்து கேட்பும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் மொத்தம் 28 கேள்விகள் அடங்கிய ஆன்லைன் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.
இதுதவிர, க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் தெரிவித்துள்ளோம். வரும் மே 19-ம் தேதி வரை இப்பணி நடத்தப்படும்.
மெட்ரோ ரயில் பற்றிய தகவல்களைப் பெறுவது எளிதானதா? மெட்ரோ ரயில் உடனே வருகிறதா? பயணத்துக்கு பணம் செலுத்துவது எளிதானதா? மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் சுத்தமாகவும், வசதியாகவும் உள்ளனவா? உட்பட பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் பயணிகளின் பணி நிலை, பாலினம், வயது, மெட்ரோவில் பயணிக்கும் நேரம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரம், மெட்ரோ ரயில்கள் இயக்க நேரம் எவ்வாறு இருக்கிறது? போதிய இடவசதி உள்ளதா? உட்பட 28 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. பயணிகளின் கருத்துகளை புள்ளிவிவரங்களாக சேகரித்து, ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.