‘சொதப்பல் டெல்லி!’
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டிருக்கிறது. போட்டியின் போக்கை வைத்து பார்க்கையில், மழை பொழியாமல் இருந்திருந்தால் டெல்லி அணி இந்தப் போட்டியை தோற்றிருக்கவே வாய்ப்பு அதிகம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை சிறப்பாக தொடங்கியிருந்தது. ஆடிய முதல் 4 போட்டிகளில் நான்கையும் அந்த அணி வென்றிருந்தது. ஆனால், அதன்பிறகு ஆடியிருக்கும் 7 போட்டிகளில் இரண்டை மட்டுமே வென்றிருக்கிறது. 4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயிருக்கிறது. இப்போது ப்ளே ஆப்ஸூக்குள் நுழையவே போராடிக் கொண்டிருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எங்கேதான் சறுக்கியது?
‘நம்பிக்கையற்ற பேட்டிங்!’
சன்ரைசர்ஸூக்கு எதிரான இந்தப் போட்டியில் டெல்லி அணி முழுமையாக பேட்டிங் ஆடிவிட்டது. அதுவரை மழை பெய்யவில்லை. 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பேட்டிங்கில் முழுமையாக சொதப்பியிருந்தனர்.

பவர்ப்ளேக்குள்ளாக மட்டுமே அந்த அணி 4 விக்கெட்களை இழந்திருந்தது. மலைபோல் நம்பப்பட்ட கே.எல்.ராகுலும் 10 ரன்களிலேயே அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய ஸ்டப்ஸாலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்து அதிரடி காட்டிய அசுதோஷ் சர்மாவாலும் மட்டுமே டெல்லி அணி ஓரளவுக்கு சுமாரான ஸ்கோரை எட்டியது. டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் யாருமே ஒருவித Conviction யோடு (நம்பிக்கையோடு) பெரிய ஷாட்களை ஆடவில்லை.

அரைகுறையாக பேட்டை விட்டு அவுட் ஆகினர். சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. கடினமான கேட்ச்களையும் திறமையாகப் பிடித்து அசத்தினர்.
‘மாறிக் கொண்டேயிருக்கும் ஓப்பனர்கள்!’
இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்தான் அந்த அணியின் சரிவுக்கும் காரணம் என நினைக்கிறேன். இந்தப் போட்டியில் கருண் நாயரும் பாப் டூ ப்ளெஸ்சிஸூம் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 0. இதுதான் டெல்லி அணிக்கு இந்த சீசனின் பெரிய பிரச்னை.

ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் – டூ ப்ளெஸ்சிஸ், ஜேக் ப்ரேஸர் – கே.எல்.ராகுல், ஜேக் ப்ரேஸர் அபிஷேக் பொரெல், அபிஷேக் – கருண் நாயர், அபிஷேக் – டூ ப்ளெஸ்சிஸ், கருண் நாயர் – டூப்ளெஸ்சிஸ் என விரல்களுக்குள் அடங்காத அளவில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்களை டெல்லி அணி இந்த சீசனில் பயன்படுத்தியிருக்கிறது.

ஆடியிருக்கும் 11 போட்டிகளில் 6 வெவ்வேறு விதமான ஓப்பனிங் கூட்டணிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த கூட்டணியுமே அவர்களுக்கு செட் ஆகவில்லை. 11 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஓப்பனிங் கூட்டணி அரைசதத்தை கடந்திருக்கிறது. அதைத்தாண்டி 3 போட்டிகளில் மட்டுமே ஓப்பனிங் கூட்டணி 30 ரன்களை கடந்திருக்கிறது.
ஓப்பனிங் கூட்டணி இவ்வளவு மோசமாக ஆடுவதற்குத்தான் அந்த அணியால் ஒரு தீர்வை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதிகபட்சமாக 2 போட்டிகளுக்கு மேல் ஒரு ஓப்பனிங் கூட்டணியை பயன்படுத்தவே இல்லை. ஓப்பனர்களை மாற்றிக் கொண்டே இருக்கையில் அதற்கேற்ப கீழே உள்ள மற்ற ஆர்டர் வீரர்களையும் மாற்ற வேண்டியிருக்கிறது. இத்தனை களேபரங்களைத் தாண்டி மிடில் ஆர்டர் சோபித்தால் மட்டுமே அந்த அணியால் வெல்ல முடிகிறது.

அதேமாதிரி, டெல்லி அணி தோற்கிற போட்டிகளில் அவர்களின் பௌலிங்கும் சுமாராகவே இருக்கிறது. கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீழ்ந்திருக்கிறது.
‘பௌலிங்கும் சொதப்பல்!’
டெல்லி அணி வழக்கமாக 6 பௌலர்களை பயன்படுத்துகிறது. தோல்வியுற்ற போட்டிகளில் எல்லாமே இந்த 6 பௌலர்களில் 3 பௌலர்களின் எக்கானமி 10 க்கும் மேல் இருக்கிறது. அதுவும் அவர்களின் முக்கிய பௌலர்களான ஸ்டார்க், முகேஷ், விப்ரஜ் ஆகியோர்தான் இவ்வளவு அதிக எக்கானமியை வைத்திருக்கின்றனர்.
இவர்கள் மூவரில் ஒருவரோ இருவரோ உச்சக்கட்டமாக 14 க்கும் அதிகமாக எக்கானமி வைத்திருந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. லக்னோவுக்கு எதிரான முதல் போட்டி, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் டெல்லி வென்றிருந்தது. அப்போதும் கூட மூன்று பௌலர்கள் 10+ எக்கானமி வைத்திருந்தனர்.

ஆனால், அந்தப் போட்டிகளையுமே கூட 1 விக்கெட் வித்தியாசத்திலும் சூப்பர் ஓவர் வரை சென்றும் என நூலிழையில்தான் டெல்லி வென்றிருக்கும். ஆக, மேலோட்டமாக பார்க்க அவர்களின் பேட்டிங்கில் மட்டும்தான் பிரச்சனை இருப்பதாக தோன்றும். ஆனால், நுட்பமாகப் பார்க்கும்போது அவர்களின் பௌலிங்கில் பிரச்சனை இருப்பதும் புரிய வருகிறது.

டெல்லிக்கு இன்னும் 3 போட்டிகள் எஞ்சியிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு பெரிய ஓட்டைகளோடு அந்த அணி ப்ளே ஆப்ஸ் செல்வது கடினமே. ஒருவேளை ப்ளே ஆப்ஸூக்கு செல்கிறார்கள் என்கிறபட்சத்தில் இந்த பிரச்சனைகளை எப்படி தீர்த்தார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.