புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடும். அப்போது, அதில் இருந்து தப்பித்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவே போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை. தாக்குதல் அபாயம் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, கல்பாக்கம், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் தாராபூர், உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லை மாவட்டங்கள் உட்பட 259 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை இன்று மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தயார் படுத்துவதே இந்த போர்க்கால ஒத்திகையின் நோக்கம். போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை கிராம அளவில் மேற்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்கள், ராணுவ மையங்கள், பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், நீர்மின் நிலையங்களுடன் கூடிய அணைகள் உள்ள பகுதிகளில் இந்த ஒத்திகை நடைபெற வேண்டும்.இந்த ஒத்திகையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், துணை ராணுவப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீஸார், மக்கள் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர், என்சிசி, என்எஸ்எஸ், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.
அபாயம் ஏற்பட்டால் சைரன்கள் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்படும். இதை கேட்டதும் மக்கள் உடனடியாக பதுங்கு குழிகள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மறைந்து கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் வெளிச்சம் இருக்கும் பகுதிகளை குறிவைத்துதான் குண்டு வீசப்படும். அதனால் இரவு நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும். மீட்பு குழுவினர் தயார்நிலையில் இருப்பதை சரிபார்க்க வேண்டும். தாக்குதல் அபாயம் உள்ள பகுதியில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஒத்திகையின் போது விமானப்படையின் ஹாட் லைன் மற்றும் ரேடியோ தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம்தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும்.
எதிரி நாட்டின் தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள முதல் பிரிவில், டெல்லி, மும்பை, சென்னை, கல்பாக்கம், குஜராத்தின் சூரத், அணுமின் நிலையம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் தாராபூர் ஆகிய இடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணு மின் நிலையம் ஆகிய இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. எனினும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.