‘மும்பை தோல்வி!’
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. தோல்விக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

‘இது ஒரு க்ரைம்!’ – ஹர்திக்
ஹர்திக் பாண்ட்யா பேசியதாவது, “சின்னச்சின்ன வித்தியாசங்களில்தான் நாங்கள் தோற்றிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் மிகச்சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன். எங்களின் வீரர்கள் களத்தில் தங்களின் 120% உழைப்பையும் கொட்டி கடுமையாக முயன்றனர். நாங்கள் பேட்டிங் ஆடும்போது மைதானம் ஈரமாக இல்லை.
இரண்டாம் இன்னிங்ஸில் ஈரமாக இருந்தது. அது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், இதுதான் ஆட்டம். நாங்கள் ஆடித்தான் ஆக வேண்டும். நாங்கள் ஒரு 25 ரன்களைக் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன்.

நாங்கள் தவறவிட்ட கேட்ச்சுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், கடைசி ஓவரில் வீசப்பட்ட நோ பாலும் நான் வீசிய நோ – பாலையும் எக்ஸ்ட்ராக்களையும் அப்படி பார்க்கமாட்டேன். பொதுவாகவே அப்படியான எக்ஸ்ட்ராக்கள் என்னைப் பொறுத்தவரை க்ரைம்தான்.” என்றார்.