வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்று கனவு கொண்ட மாணவர்களின் முதல் இலக்கு பெரும்பாலும் லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அமெரிக்காவின் ஹாவர்டு என்று தான் வரிசைப்படும். ஆனால், வெளிநாட்டு மாணவர்களின் ஹாவர்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை என்ற ஓர் அதிரடி, ‘அடாவடி’ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மாணவர்கள், பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டத்தின் (Student and Exchange Visitor Program – SEVP) மூலம் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் ஆண்டுதோறும் சேருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 உலக நாடுகளை சேர்ந்த 6,800 மாணவர்கள் சேர்கின்றனர், அதில் சராசரியாக 500 முதல் 800 பேர் வரை இந்திய மாணவர்களும் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். நடப்பு கல்வி ஆண்டில் 788 இந்திய மாணவர்கள் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் ட்ரம்ப் நிர்வாகம் இந்தக் கெடுபிடியைக் கட்டவிழ்த்துள்ளது. ஏற்கெனவே, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹாவர்டு பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தது. தற்போது, ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.
6 நிபந்தனைகள்; 72 மணி நேர கெடு: மீண்டும் சாட்டையை சுழற்றியுள்ள ட்ரம்ப் நிர்வாகம், 6 நிபந்தனைகளும், அதனை ஒப்புக் கொள்ள 72 மணி நேர கெடுவும் விதித்துள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் கிறிஸ்டி நவோம் இது தொடர்பாக கூறியது: ஹாவர்டு பல்கலைக்கழகம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், இனியும் அதனால் வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ள முடியும். அவை:
1. கடந்த 5 ஆண்டுகளில் பல்கலை.யில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் எவரேனும் பல்கலை. வளாகம் அல்லது அதற்கு வெளியே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அதை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
2. கடந்த 5 ஆண்டுகளில் ஹாவர்டு பல்கலை.யில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் எவரேனும் பல்கலை. வளாகம் அல்லது அதற்கு வெளியே, ஆபத்தான செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.
3. கடந்த 5 ஆண்டுகளில் ஹாவர்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எவரேனும் பல்கலை. வளாகம் அல்லது அதற்கு வெளியே, பிற மாணவர்களுக்கு அல்லது ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால், அது தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும்.
4. கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு மாணவர்களின் நடத்தை குறித்த பல்கலைக்கழகத்தின் ஆவணக் குறிப்புகளை ஒப்படைக்க வேண்டும்.
5. கடந்த 5 ஆண்டுகளில் பல்கலை. வளாகத்தினுள் வெளிநாட்டு மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
6. கடந்த 5 ஆண்டுகளில் பல்கலை.யில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் எவரேனும் வகுப்பின் பிற மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், பேராசிரியர்களின் உரிமைகளை மீறி நடந்து கொண்டிருந்தால், அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். என்று நவோம் பட்டியலிட்டுள்ளார்.

கெடுபிடி ஏன்? – ஹாவர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து அரசின் கோரிக்கையை கண்டு கொள்ளாது, வெளிநாட்டு மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் அவர்களின் நடத்தை தொடர்பான ஆவணங்களைத் தர மறுத்து வருகிறது என்பதே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களிலும் ஹமாஸ் ஆதரவுக் குரல்கள் ஒலித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. பல்கலைக்கழகம் தன்னுடைய பன்முகத்தன்மை என்று கூறுவது இனவாதத்தை அனுமதிப்பதாகவும், குறிப்பாக யூத எதிர்ப்பு மாணவர்களை ஊக்குவிப்பதாகவுமே உள்ளது. அதனாலேயே அரசு இந்த கெடுபிடியைக் காட்ட வேண்டியதாக இருக்கிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தடை? – ஆனால், ஹாவர்டு பல்கலைக்கழகம் இந்த நெருக்கடிகளுக்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. சட்டபூர்வமாக இதை எதிர்கொண்டுள்ளது. ட்ரம்ப் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாவர்டு பல்கலைக்கழகம் இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தையும் நாடிவிட்டது. ஃபெடரல் நீதிமன்றம் ஒன்று ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்ததும் நினைவுகூரத்தக்கது.
இனி என்ன ஆகும் மாணவர்களின் நிலைமை? – ஒருவேளை ஹாவர்டு பல்கலைக்கழகம் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கெடுபிடிகளுக்கு இணங்காவிட்டால், ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு தடையின்றி அமலுக்கு வந்தால் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
அங்குள்ள மாணவர்கள் ஹாவர்டு போலவே ‘மாணவர்கள் – பார்வையாளர்கள் பரிமாற்றத் திட்டத்தின்’ கீழ் கல்வி பயிற்றுவிக்கும் வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை நாட வேண்டியிருக்கும். அது சாத்தியப்படாவிட்டால் அவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா செல்லாததாகும். அதனால், அவர்கள் உடனடியாக அங்கிருந்து தத்தம் சொந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கனவுகளை தொலைக்க முடியாது என்று வெளியேற மறுத்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
இவ்வாறாக படிப்பினை, ஆராய்ச்சியை பாதியிலேயே வேறொரு பல்கலைக்கழகத்துக்கு மாறுதல் கோருவது / மாறுவது என்பது நிர்வாக ரீதியாக சிக்கலானது என்பதைத் தாண்டியும், மாணவர்களின் ஆராய்ச்சி முயற்சிகளை கடுமையாக பாதிக்கும். அவர்களின் ஆய்வுப் பணிக்குத் தேவையான நிதியுதவி பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளும் தடைபடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் அங்கு நடப்பு கல்வியாண்டில் பயிலும் 700+ இந்திய மாணவர்களின் நிலைமையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சீனாவின் எதிர்வினை: ட்ரம்ப் உத்தரவுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ஹாவர்டு பல்கலை. உள்ளிட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சீனர்களும் அதிகமாக இருப்பதால், ட்ரம்ப் உத்தரவை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது கல்வியை அரசியல்படுத்தும் முயற்சி” என்று அமெரிக்காவை சாடியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “நாடுகளுக்கு இடையேயான கல்வி ஒத்துழைப்பை அரசியல்மயமாக்குவதை சீனா எப்போதுமே கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலக அரங்கில் அதன் பிம்பத்தை சிதைக்கும். அதன் சர்வதேச அடையாளத்தை சேதப்படுத்தும். சூழல் எதுவாயினும், வெளிநாட்டில் உள்ள சீன மாணவர்கள், அறிஞர்களின் நியாயமான அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதில் சீனா எப்போதும் உறுதியாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் MAGA வாக்குறுதியின் நீட்சியா? – தனது தேர்தல் பிரச்சாரம் தொட்டே ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவதே இலக்கு என்று கூறி வந்தார். அதன் நீட்சியாகத் தான் அவர் விசா கெடுபிடிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடிகள் என்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
“டொனால்டு ட்ரம்ப் முன்னெடுக்கும் அதிரடி வரிவிதிப்பு, குடியேற்ற விதிகளில் திருத்தம், தீவிர விசா கட்டுப்பாடுகள் ஆகியன, பிரதானமாக அமெரிக்காவின் வணிக நலனை அடிப்படையாகக் கொண்டவையே. தற்காப்பு பொருளாதாரம் சார்ந்தவையே. ‘தற்காப்புப் பொருளாதாரம்’ – பெரிய நாடுகளுக்கு ஆதாயம்; சிறிய நாடுகளுக்கு ஆபத்து. குறிப்பாக, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் மூன்றாம் உலக நாடுகளின் இளைஞர்கள் வஞ்சிக்கப்படுவார்கள் இதற்குப் பின்னால் இருப்பது ‘ஓட்டு அரசியல்’. ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாதது.
ஆனால், இது அப்பாவி இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார் பிரபல எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. ஏற்கெனவே இங்கிலாந்து, கனடா எனப் பல நாடுகளும் விசா கெடுபிடிகளை கட்டவிழ்த்துள்ள பின்னணியில் அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இக்கருத்து ட்ரம்ப்பின் ஹாவர்டு பல்கலைக்கழகத்தின் மீதான நடவடிக்கைக்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
‘அடிப்படையை அசைக்கலாமா’ – ஹாவர்டு மீதான ட்ரம்ப் நடவடிக்கையில் கல்வியை அரசியல்மயமாக்கும் முயற்சி என்ற சீனாவின் குற்றச்சாட்டும் கவனிக்கத்தக்கது. ஹாவர்டு மட்டுமல்ல, எந்த நாட்டில் இருக்கும் எந்தவொரு பல்கலைக்கழகமாக இருந்தாலும் அதில் வெளிநாட்டு மாணவர்களின் இருப்பு என்பது வெறும் கல்விக்காக அவர்களின் வருகையாக இருப்பதைவிட, வகுப்பறைகளுக்குள் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் சார்ந்த சர்வதேச பார்வையைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடியதாக இருக்கிறது.
ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகத்தின் அடையாளம் அத்தகைய பரந்துபட்ட பார்வைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவே இருக்க முடியும். பல்கலைக்கழகங்கள் நிமித்தமான வரலாற்றுச் சான்றுகளும் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால், அத்தகைய அடிப்படைத் தன்மையையே நெறிக்கும் ஒரு விரோதப் போக்கைத் தான் உலகின் மிகப்பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று என்ற அடையாளத்தை சுமந்து நிற்கும் அமெரிக்கா கையிலெடுத்துள்ளது. யுஎஸ் – எய்ட் (USAID) போன்ற நிதிகளை நிறுத்துவது, வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி போட்டு எதிர்ப்புக் குரல்கள் எல்லாவற்றையும் தீவிரவாத முழக்கங்களாகப் பார்ப்பது நிச்சயமாக ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல.