மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி குழு சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

சமாஜ்வாதி எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியேரா லியோனி நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்பி சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா நாடுகளுக்கும் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் நாடுகளுக்கும், பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு நேற்று முன்தினம் இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றது. தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கனிமொழி குழுவினர் பயணம் செய்த விமானம் மாஸ்கோவில் நுழைந்தபோது உக்ரைன் ராணுவம் 103 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோவில் அதிதீவிரமாக தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக மாஸ்கோவில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டன. கனிமொழி குழு சென்ற விமானம் உட்பட ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் 45 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன.

உக்ரைன் ராணுவ ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கிய பிறகு மாஸ்கோ விமான நிலையங்களில் பயணிகள் விமானங்கள் தரையிறங்கின. கனிமொழி குழுவினர் சென்ற விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. அவர்களை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.

கனிமொழி குழுவில் ராஜீவ் ராய், மியான் அட்லப் அகமது, கேப்டன் பிரிஜேஷ் சவுதா, பிரம் சந்த் குப்தா, அசோக் குமார் மிட்டல் ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் மத்திய வெளியுறவுத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மன்ஜீவ் எஸ். புரி, ஜாவித் அஷ்ரப் ஆகியோரும் உள்ளனர். இந்த குழுவினர் ரஷ்யாவின் சர்வதேச விவகார கவுன்சில் துணைத் தலைவர் ஆண்ட்ரே டெனிசோவ் மற்றும் மூத்த எம்பிக்களை மாஸ்கோவில் நேற்று சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து கனிமொழி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்யாவின் சர்வதேச விவகார கவுன்சில் துணைத் தலைவர் ஆண்ட்ரே டெனிசோவ் தலைமையிலான குழுவினரை இந்திய எம்பிக்கள் குழு சந்தித்துப் பேசியது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒன்றிணைந்திருக்கிறது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நாங்கள் எதிர்த்து நிற்போம். தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். எங்களது கருத்துகளை ரஷ்ய குழுவினரிடம் எடுத்துரைத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், லாட்வியா ஆகிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.