கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றது.

2025-26-ம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.297/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத் தொகையாக 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50/- எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195/- எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215/-எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349/- என வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750/-லிருந்து ரூ.3,500/- என உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 அரவைப் பருவத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரவைப் பருவம் நிறைவு பெற்றபின் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூபாய் 1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட ஏதுவாக எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இத்தொகை சம்மந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையாக சுமார் ரூ.1,945.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்காகவும், சிறப்பு ஊக்கத்தொகை, மானியங்கள், கரும்பு கிரயத் தொகையை உரிய காலத்தில் வழங்க நிதி உதவி உள்ளிட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வருக்கு கரும்பு விவசாயிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.