சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த லாட்டரியில் சுமார் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் எமிரேட்ஸ் டிரா என்ற லாட்டரியை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மெகா 7 கேம் என்ற லாட்டரி குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த, இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன் கலந்துகொண்டு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க டாலர்கள்) வென்றுள்ளார். இது ஆன்-லைனில் விளையாடும் லாட்டரி விளையாட்டாகும்.
சென்னையைச் சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி நடந்த லாட்டரியில் கலந்துகொண்டபோதுதான் இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறும்போது, “எனக்கு லாட்டரியில் இவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று கூறியபோது நான் முதலில் நம்பவில்லை. இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது.
பரிசு கிடைத்ததில் 70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற பரிசை நான் பெற்றதில்லை. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல; இது என் குடும்பம், என் குழந்தைகள் மற்றும் படிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். இப்போது தலைமுறை தலைமுறையாகச் செல்வத்தை உருவாக்க இது வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.
இதுதொடர்பாக டைகெரோஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டியன் கூறும்போது, “நாங்கள் நடத்திய லாட்டரியில் ரூ. 230 கோடியை வென்ற ஸ்ரீராம் ராஜகோபாலனுக்கு வாழ்த்துக்கள், அவருடைய வாழ்க்கையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையும் இதனால் மாற்றப்படும். வளைகுடாவில் பிறந்த எங்கள் வெற்றி இப்போது உலகளவில் விரிவடைந்து வருகிறது” என்றார்.
எளிமையான, நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த ஸ்ரீராம், 1998-ல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற நிலையில் அண்மையில் சென்னைக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.