லோகேஷ் அபார பந்துவீச்சு.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

சேலம்,

சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் ஒருபுறம் நிலைத்து விளையாட மறுமுனையில் ஜெகதீசன் (11 ரன்கள்), விஜய் சங்கர் (26 ரன்கள்), ஸ்வப்னில் சிங் (20 ரன்கள்) நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. விரைவில் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் சுனில் கிருஷ்ணா (32 ரன்கள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி வலுவான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 180 ரன்கள் அடித்தது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா இந்திரஜித்துடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.

இவர்களில் அஸ்வின் 67 ரன்னிலும், பாபா இந்திரஜித் 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அத்துடன் அணியை வெற்றிப்பாதைக்கு அருகில் அழைத்துச்சென்றனர். ஒரு கட்டத்தில் திண்டுக்கல் அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் திண்டுக்கல் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சேப்பாக் அணி தரப்பில் லோகேஷ் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.