கண்ணூர்,
கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் ஏ.கே.ரைரு கோபால். மருத்துவரான இவர், ஏழைகளுக்கு உதவும் பொருட்டு வெறும் ரூ.2 மட்டுமே வாங்கி கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இது, அவருக்கு நீடித்த புகழையும், புனைபெயரையும் பெற்று தந்தது. 81 வயதான நிலையிலும் அவர் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
நோயாளி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்தபோது, அங்கு அவர் காணப்பட்ட ஏழ்மை நிலைமையை கண்டு அன்று முதல் மருத்துவம் பார்க்க 2 ரூபாய் கட்டணமாக பெற முடிவு செய்து தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்தார்.
இவர், தினமும் 300 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பாராம். இதற்காக அவருக்கு மனைவி சகுந்தலா உதவியாக இருந்துள்ளார்.இப்படி 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றி வந்த ஏ.கே.ரைரு கோபால் வயோதிகம் காரணமாக உடல்நிலை குன்றிய நிலையிலும் தன் மருத்துவ சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் அவர் ‘மக்கள் மருத்துவர்’ என்று போற்றப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று டாக்டர் ஏ.கே.ரைரு கோபால் மரணம் அடைந்தார்.இதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் சோகத்தில் வாடியுள்ளனர். மேலும் அவரது மரணத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் பலரும் மருத்துவத்துறைக்கு பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.