திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, சமீபத்தில் அவரது பயணத்தில் பெரும் சரிவை சந்தித்தார். கிட்டத்தட்ட அவரது கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும் இருந்தன. ஆனால் தற்போது தனது தவறுகளை உணர்ந்து ஒரு தீர்க்கமான முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
ப்ரித்வி ஷா உள்ளூர் அணியான மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், திடீரென அந்த அணியை விட்டு விலகினார். 17 வருடங்களாக மும்பை அணியுடனான பந்தத்தை ப்ரித்வி ஷா முறித்துக்கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அணியின் கேப்டன் அஜிங்கியா ராஹானேவுடன் ப்ரித்வி ஷாவுக்கு சுமூகமான உறவு இல்லை என்றும் கடந்த சில காலமாக அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ப்ரித்வி ஷா தற்போது மும்பை அணியிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று மகாராஷ்டிரா அணியில் இணைந்துள்ளார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பழைய நிலைக்கு மாற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவருக்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது ப்ரித்வி ஷாவுக்கு ஒரு புதிய தொடக்கத்தை தேடிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், ப்ரித்வி ஷா ருதுராஜ் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாட இருக்கிறார். மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். தற்போது ப்ரித்வி ஷா மகாராஷ்டிரா அணியில் சேர்ந்துள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வேகத்திலேயே சதம் அடித்து மிரட்டிய ப்ரித்வி ஷா, அதன்பின்னர் தனது ஃபார்மை இழந்தார். அவரது ஃபிட்னஸ் குறித்து பலரும் விமர்சித்தனர். தற்போது கிரிக்கெட்டில் புதிய அத்யாயத்தை உருவாக்கவுள்ள ப்ரித்வி ஷா, அவரது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும்.
ப்ரித்வி ஷா இதுவரை 12 சர்வதேச கிரிகெட்டில் விளையாடி இருக்கிறாஅர். அதில் அவர் 528 ரன்களை அடித்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும். அதேபோல், முதல் தர கிரிக்கெட்டில் அவர், 58 போட்டிகளில் விளையாடி 4556 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 13 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji