புதுடெல்லி: வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமி திரும்பிய இந்தியாவின் ஷுபான்ஷு சுக்லா குறித்து விவாதித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் விண்வெளித் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார். 2020 முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளித்து வருகிறது. அதன் மூலம் தேசத்தின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 45 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று அவர் தெரிவித்தார்.
“2026-ல் வியோமித்ரா என்ற ரோபோவை கொண்டு ஆளில்லா விண்வெளிப் பயணத்தை இந்தியா மேற்கொள்ளும். அதைத் தொடர்ந்து 2027-ல் மனிதர்களை விண்வெளி பயணத்துக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடைபெறும். 2035-ல் ‘பாரத் அந்தரிக்ஷ் நிலையம்’ என்ற விண்வெளி நிலையத்தை இந்தியா நிறுவும்.
தொடர்ந்து 2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்கி தனது தடத்தை பதிப்பார். இது 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை அறிவிக்கும் விதமாக அமையும்” என அவர் பேசினார்.
பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் கோஷமிட்டதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த விவாதம் முழுவதுமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.