விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
விருதுநகர் பட்டம்புதூர் ரயில்வே கிராசிங் அருகே மதுரை – குமரி ரயில்வே இருப்புப் பாதையில் புதன்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி ரயில் மோதியதில் 3 பெண்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருவரது கையில் தர்மர் – ராஜேஸ்வரி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்த விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்கள் மூவரும் யார் என்பது குறித்தும் அவர்கள் பற்றிய விவரங்கள் குறித்தும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.