கும்பகோணம்: நோய் தடுப்பு மருந்து துறையில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப கூடாது என அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் கீழ் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய தாய்மை நல துணை செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய நல செவிலியர் ஆகியோர், தடுப்பூசி செலுத்துவது, தாய் சேய் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை, குடும்ப நல பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துறையில் கடந்த 3 ஆண்டுகளாக 6 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றும் செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், 2022 மே 14-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற செவிலியர்கள் மாநாட்டில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், எனவே, பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க நிறுவனத் தலைவர் இந்திரா கூறியது: தமிழகத்தில் 6 ஆயிரம் செவிலியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு 4 கட்ட பதவி உயர்வு உள்ளது. ஆனால், மூத்த பெண் செவிலியர்களுக்கு என இருந்த மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பதவியை பறித்து, பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இதைக் கண்டித்து, நாங்கள்போராட்டங்களை முன்னெடுத்ததால், 2016-ல் தலா 50 சதவீதம் என இரு தரப்பினருக்கும் பிரித்து அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தனர். ஆனால், அறிவித்து 9 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், இந்தத் துறையில் பதவி உயர்வு, ஊதியத்தில் ஆண், பெண்பாலின பாகுபாடு தொடர்கிறது.
இதேபோல, செவிலியருக்கான பணியிடங்களை தொகுப்பூதியம் மூலம் நிரப்பாமல், நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்த தாய்மை நல செவிலியர் பணியிடங்களை திரும்ப பெறக் கூடாது.
இதனால், 5 பேர் பார்க்க வேண்டிய பணிகளை ஒருவர் மட்டும் பார்ப்பதால், அவர்கள் பணிச்சுமையால் வேதனைக்குள்ளாகின்றனர். செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2022, ஜனவரியில் உயர்நிலை குழு அமைத்து, மார்ச்சில் அறிக்கை பெறப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளாக அதன் நிலை என்ன எனத் தெரியவில்லை.
எனவே, தமிழக அரசு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நிரப்பும் முடிவை கைவிட வேண்டும். மூத்த செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், செவிலியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களை திரட்டி பணிகளை புறக்கணித்து கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.