ஐபிஎல் 2025 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டது. டாப் ஆர்டர், மிடில் மற்றும் பவுலிங் என அனைத்தும் அவர்களுக்கு கை கொடுத்தது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டி வரை முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இருப்பினும் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மினி ஏலத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகிறது பஞ்சாப் அணி. ஒரு வலுவான அணியை கட்டமைக்க சில முக்கிய வீரர்களை அணியிலிருந்து நீக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள்
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் மோசமாக விளையாடினார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் அவர் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இந்த ஆண்டு 6 இன்னிங்ஸ்களில் வெறும் 48 ரன்களை மட்டுமே எடுத்தார். மெகா ஏலத்தில் 3வது முறையாக அணிக்குள் வந்த மேக்ஸ்வெல், இதற்கு முன்பு விளையாடிய போது அணிக்கு பலம் சேர்த்து இருந்தார். ஆனால் இந்த முறை அதனை செய்ய தவறினார். மேலும், தொடரின் பாதியிலேயே காயமடைந்து விளையாட முடியாமல் வெளியேறினார். அவரது மோசமான ஃபார்ம் மற்றும் அதிக விலை காரணமாக பஞ்சாப் நிர்வாகம் நீக்க முடிவு செய்துள்ளது.
அஸ்மதுல்லா உமர்சாய்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த முக்கிய ஆல்-ரவுண்டரான அஸ்மதுல்லா உமர்சாய் இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய போதிலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் பேட்டிங்கில் 57 ரன்களும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவரது இந்த பார்ம் காரணமாக, பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது.
ஆரோன் ஹார்டி
ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் ஹார்டி, கடந்த சீசன் முழுவதும் அணியுடன் இருந்தும், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. வெளிநாட்டு வீரர்களுக்கான வரிசையில் அவர் கடைசி இடத்திலேயே உள்ளார். இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாததாலும் அவர் அணிக்குள் வர முடியாமல் போக முக்கிய காரணமாக உள்ளது. இதனால் அவரை அணியிலிருந்து நீக்க பஞ்சாப் கிங்ஸ் திட்டமிட்டுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல், இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக பந்துவீசினாலும், அவர் ஏலத்தில் ரூ.11 கோடிக்கு எடுக்கப்பட்டார். இதனால் மினி ஏலத்தில் அவரை விட்டு மீண்டும் குறைந்த விலையில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் திட்டம் வைத்துள்ளது. அதே போல, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டாலும், அவரது அதிக விலை காரணமாக (ரூ.11 கோடி) மினி ஏலத்தில் விட்டு குறைந்த விலையில் மீண்டும் எடுக்க திட்டம் வைத்துள்ளனர்.
About the Author
RK Spark