இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அரங்களில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வரும் தோனி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாதமும் தோனிக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தோனி மாதம் மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தோனிக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் எவ்வளவு?
பிசிசிஐயின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், எம்எஸ் தோனிக்கு மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது, பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த ஓய்வூதிய தொகையாகும். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி உள்ளார். தோனியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டும் விதமாக, இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
பிசிசிஐயின் ஓய்வூதிய விதிகள்
இந்திய கிரிக்கெட்டிற்கு பங்காற்றிய வீரர்களின் நிதி நலனை கருத்தில் கொண்டு, பிசிசிஐ ஒரு விரிவான ஓய்வூதியதிட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு, வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை கணிசமாக உயர்த்தப்பட்டது.
பிசிசிஐயின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.30,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 25 டெஸ்ட் போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்களுக்கு ரூ.60,000 ஓய்வூதியமும், 25 டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகமாக விளையாடியவர்களுக்கு ரூ.70,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 90 டெஸ்ட் போட்டிகளில் எம்எஸ் தோனி விளையாடி உள்ளார். அதன்படி, 25-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கான உயர் நிலை பிரிவில் வருவதால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.70,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களும் இதே அளவு ஓய்வூதியத்தை பெறுகின்றனர்.
ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம்
பிசிசிஐயின் இந்த ஓய்வூதிய திட்டம், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வீரர்களுக்கு ஒரு நிலையான நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது அவர்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாகவும், நன்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், வீரர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிதி ரீதியாக சமாளிக்க உதவுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும், ஒரு முன்னாள் வீரர் என்ற தகுதியில், பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தோனி இந்த ஓய்வூதியத்தை பெற்று வருகிறார். இருப்பினும் தோனி, சச்சின் போன்று முன்னணி வீரர்கள் பலரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு இந்த பணம் உதவிகரமாக இருக்கும்.
About the Author
RK Spark