போபால்,
மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியபிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர்.
இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்க வேண்டும். மத்தியபிரதேசத்தை வளமான மாநிலங்களில் ஒன்றாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க.தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்தி விட்டது என அவர் கூறினார்.
ஜிது பட்வாரியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு முதல்-மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது என்றும், இதற்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
பெண்கள் மதுபானம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துகின்றனர் என கூறி பெண்களை அவமதித்து உள்ளார். பத்வாரியை பதவியில் இருந்து கார்கே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தீஜ் திருவிழாவை முன்னிட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அவருடைய இந்த பேச்சு அவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது.
இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் ஹேமந்த் கந்தல்வால் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட செய்தியில், மத்திய பிரதேச மாநில தலைவரான பத்வாரி, பெண்களை குடிகாரர்கள் என கூறியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
உணவு இன்றி உண்மையான பக்தியுடன் நாடு முழுவதும் நம்முடைய லட்சக்கணக்கான சகோதரிகள் விரதம் மேற்கொண்டு வரும் சூழலில், இந்த புனித நாளில், கண்ணியமற்ற மற்றும் புண்படுத்தும் வகையிலான அவருடைய பேச்சு இந்திய கலாசாரத்திற்கு மட்டுமின்றி, லட்சக்கணக்கான பெண்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளது. இதற்காக ஜிது பத்வாரி பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.