தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்..? விஜய் சங்கர் விளக்கம்

சென்னை,

ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த முன்னணி ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் எதிர்வரும் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ளார்.

தமிழக அணிக்காக விளையாடிய கால கட்டங்களில்தான் அவர் இந்திய அணிக்கு விளையாட தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து விஜய் சங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

அதில், “சில நேரங்களில், நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, முன்னேறி புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும். நான் நன்றாக ஆடி வருவதாக நினைக்கிறேன். முக்கியமாக, நான் தொடர்ந்து ஆட விரும்புகிறேன், அவ்வளவுதான். பல வருடங்கள் ஆடிய பிறகு, வெளியே உட்கார்ந்து தண்ணீர் கொடுப்பது மிகவும் கடினம். கடந்த ரஞ்சிக்கோப்பையின் முதல் 2 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன், பின்னர் மீண்டும் வந்தேன். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் கடைசி இரண்டு போட்டிகளில் மீண்டும் நீக்கப்பட்டேன்.

அப்போதிலிருந்தே கடினமான தருணங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில் உங்களுக்கு தெளிவு தேவை. எனக்கு அந்த தெளிவு கிடைக்கவில்லை. தேர்வாளர்களிடமிருந்து எந்த பாதுகாப்பு உணர்வும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே, ஒரு கட்டத்தில் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் எங்கள் பயிற்சியாளர் வந்து தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், இங்கு தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தேன். இந்த அமைப்பில் தொடர்ந்து போராடி ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளை எடுத்துக்கொண்டாலும், 2022-ல் மட்டுமே நான் ஒரே பேட்டிங் வரிசையில் ஆடினேன், எல்லா போட்டிகளிலும் 6-வது இடத்தில் ஆடி தொடர்ச்சியான சதங்கள் அடித்தேன். ஆனால், அதற்குப் பிறகு, 3-வது இடத்திலிருந்து 7-வது இடம் வரை எல்லா இடங்களிலும் ஆடினேன். இதற்கு எந்த விளக்கமும் எனக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் என்னை இன்று ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளன” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.