செப்டம்பர் 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சமீபத்தில் காய்ச்சல் காரணமாக, துலீப் கோப்பை தொடரில் வடக்கு மண்டல அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்தார் ஷுப்மன் கில். இதனால், அவரது உடற்தகுதி குறித்து சில கவலைகள் எழுந்தன. இந்த நிலையில், தற்போது அவர் முழு உடற்தகுதியை எட்டியிருப்பது அணி நிர்வாகத்திற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கில், விரைவில் துபாய்க்கு பயணம் மேற்கொள்வார்.
Add Zee News as a Preferred Source

பும்ரா, ரோஹித் பயிற்சி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜஸ்பிரி பும்ராவும் இந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிய கோப்பையில் விளையாட தயாராகியுள்ளார். இவர்களுடன், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் ரோஹித் சர்மா, முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த உடற்தகுதி முகாமில், வழக்கமான யோ-யோ டெஸ்டுடன், வீரர்களின் எலும்பு அடர்த்தியை பரிசோதிக்கும் நவீன DXA ஸ்கேன் முறையும் பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களின் காயம் ஏற்படும் அபாயத்தை கண்டறிந்து, அதை தடுக்க உதவுகிறது.
மற்ற வீரர்களின் நிலை
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு, உடனடியாக எந்த போட்டிகளும் இல்லை. இருப்பினும், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடும் மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் & வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பைக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ளதால் இருவரும், தேவைப்பட்டால் அணிக்கு அழைக்கப்படுவார்கள். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக, துலீப் கோப்பை காலிறுதியில் விளையாடாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான அணியில் உள்ள மற்ற வீரர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் ரியான் பராக் ஆகியோர் துலீப் கோப்பை காலிறுதியில் விளையாடியதால், அவர்களுக்கு தனியாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. முக்கிய வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருப்பதால், இந்திய அணி ஆசியக் கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.
About the Author
RK Spark