பெர்லின்,
2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வட ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாகாணத்தின் முதல்-அமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்பு பிரிவை சேர்ந்த அன்யா டி வூஸ்ட், இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் டசெல்டோர்ப் நகரில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மேற்கொள்வது குறித்து BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
Knorr Bremse நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரை தலைமையகமாக கொண்ட நார் –பிரெம்ஸ் (Knorr Bremse) நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் சுமார் 3.500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரெயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Knorr Bremse நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா, துணை தலைவர் ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Nordex குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரை தலைமையகமாக கொண்ட Nordex குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாடு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும்.
ebm-papst நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் மல்பிங்கன் நகரை தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது. இந்நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட (Electronically Commutated) மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாக கொண்டு HVAC, ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.
இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ebm-papst நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுத்திட்டார்.
BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் சந்திப்பு
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரை தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகன பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர், BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.