காத்மண்டு,
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய தாக்குதலுல் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சமூகவலைதள செயலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. அதேவேளை, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், மந்திரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
இந்நிலையில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலாநாத் கனால் வீட்டையும் போராட்டக்காரர்கள் இன்று தீவைத்து எரித்தனர். டல்லு நகரில் உள்ள ஜலாநாத் வீட்டில் தீ வைக்கப்பட்டது. தீவைப்பு சம்பவம் நடைபெற்றது வீட்டில் ஜலாநாத் கனாலின் மனைவி ரூபி லெட்சுமி சித்ரகர் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தில் ரூபி லெட்சுமிக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கிர்டிபூர் மருத்துவமனையில் ரூபி லெட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.