Asia Cup India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இந்த வாரம் தொடங்கி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி இன்று செப்டம்பர் 14 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த போட்டியில் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளனர்.
Add Zee News as a Preferred Source

ஆசிய கோப்பையில் தற்போதைய நிலை
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது முதல் போட்டிகளில் வெற்றி பெற்று, தலா 2 புள்ளிகளுடன் குரூப் A பிரிவில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபாரமான நெட் ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியும் தனது முதல் போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி, 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும்.
இந்தியா vs பாகிஸ்தான் கடைசி 5 டி20 போட்டிகளின் முடிவுகள்
கடந்த காலங்களில், இந்தியாவும் பாகிஸ்தானும் பல மறக்க முடியாத டி20 போட்டிகளில் மோதியுள்ளன. குறிப்பாக, கடந்த ஐந்து போட்டிகளின் முடிவுகள் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதை காட்டுகிறது. ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக, கடைசி ஐந்து போட்டிகளின் முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.
டி20 உலகக் கோப்பை 2024: இந்த போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, த்ரில்லான வெற்றியை பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பை 2022 : விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தால், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை 2022: இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
ஆசியக் கோப்பை 2022: அதே ஆசிய கோப்பையின் லீக் சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
டி20 உலகக் கோப்பை 2021: உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. ஷஹீன் அஃப்ரிடியின் அபாரமான பந்துவீச்சால், பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கடந்த ஐந்து போட்டிகளின் முடிவுகளை பார்க்கும்போது, இந்திய அணி 3 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இது இன்றைய போட்டியும் கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என்பதை உறுதி செய்கிறது.
About the Author
RK Spark