Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்

சென்னை: அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஜென் ஸீ தலைமுறையினர் தங்களது தகவல் பரிமாற்றத்துக்கு பிட்-சாட் (Bitchat) எனும் மெசேஜிங் செயலியை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ப்ளூடூத் வழியே இயங்கும் இந்த செயலி குறித்து விரிவாக பார்ப்போம்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆட்சியில் இருப்பவர்களின் படோடாபம் உள்ளிட்ட காரணங்களால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்த நேபாள தேசத்தின் இளம் தலைமுறையினர் அண்மையில் போராட்டத்தில் இறங்கினர். அது புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது.

இளைஞர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மொபைல் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை உள்ளிட்டவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தடை செய்ததாக தகவல். இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்கவும், தடுக்கவும் ஆட்சியாளர்கள் முயற்சி செய்த போதும் ‘பிட்-சாட்’ மெசேஜிங் செயலி மூலம் தங்களது தகவல் தொடர்பை தடையின்றி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் போராட்டத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

‘பிட்-சாட்’ மெசேஜிங் செயலி? – ட்விட்டர் (இப்போது ‘எக்ஸ்’) சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி, கடந்த ஜூலை மாதம் பிட்-சாட் மெசேஜிங் செயலி குறித்து அறிவித்தார். இதை அவரது பிளாக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மெசேஜிங் செயலி மூலம் இணையதள இணைப்பின்றியும், செல்லுலார் நெட்வொர்க் சேவையின்றியும், எந்தவித பயனர் கணக்கு இன்றியும், சர்வர்கள் இன்றியும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இது ப்ளூடூத் மூலம் இயங்குகிறது.

இதுவொரு ஆப்லைன் டெக்ஸ்டிங் செயலி. இதன் மூலம் ஒருவர் தகவல் அனுப்பும் போது அதை பெறுபவர் அருகில் இல்லை என்றால் அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு இடையே ஒவ்வொரு டிவைஸாக மாறி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவல் பரிமாற்றம் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ட் முறையில் நடைபெறும் என தகவல்.

இதை தான் போராட்டத்தின் போது நேபாள ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த செயலியை இந்தியாவிலும் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதங்களில் இதை நிறுவி பயன்படுத்தலாம். தங்களது அடுத்த பிரதமர் யார் என்பதை அமெரிக்க சாட் செயலியான Discord வழியே நேபாள இளைஞர்கள் விவாதித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஒரே ஒரு சர்வரில் சுமார் 1.45 லட்சம் பேர் இணைந்து விவாதம் நடத்தியுள்ளனர். இப்போது நேபாள நாட்டின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவர் மக்கள் மற்றும் இளைஞர்களின் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.