India vs Pakistan : 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆட்டத்தின் முடிவில் கைக்குலுக்காமல் இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த முடிவுக்குப் பின்னால் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருந்தார் என தகவல் இப்போது வெளியாகியுள்ளது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். ஆனால், இது சூர்யகுமாரின் சொந்த முடிவு அல்ல என்றும், இது பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆலோசனை என்றும் ‘டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்’ என்ற ஊடகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
Add Zee News as a Preferred Source
இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் ‘பாய்காட்’ (Boycott) ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் உயிரை விட, பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் கிரிக்கெட் முக்கியமானதா? என இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதுகுறித்து வீரர்கள் கம்பீரிடம் கலந்தாலோசித்தபோது, “சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருங்கள். பஹல்காமில் என்ன நடந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தான் பிளேயர்களுடன் கைக்குலுக்க வேண்டாம், பேச வேண்டாம், களத்தில் இறங்கி உங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக வெல்லுங்கள்” என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காமல் நேரடியாக உடை மாற்றும் அறைக்குச் சென்றனர். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் உடை மாற்றும் அறைக்குச் சென்றபோதும் கதவுகள் மூடப்பட்டிருந்தன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாகப் புகார்
இந்திய அணியின் இந்தச் செயல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிகாரப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) புகார் அளித்துள்ளது. இந்தச் செயல் ‘விளையாட்டுத் தன்மைக்கு எதிரானது’ (unsportsmanlike) என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாடியுள்ளது. போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் (Andy Pycroft), டாஸ் போடுவதற்கு முன்னரே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம், இந்திய வீரர்களுடன் கைக்குலுக்க வேண்டாம் என்று கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றும் PCB உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அணி அபார வெற்றி
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை குரூப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஸ்கோரை இந்திய அணி 15.5 ஓவர்களில் எடுத்தது. அத்துடன் குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
About the Author
S.Karthikeyan