கை குலுக்க மறுத்த விவகாரம்: பாக். அணியை விளாசிய இந்திய முன்னாள் கேப்டன்

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதன் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதில் இந்தியா – ஓமன் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே யுஏஇ மற்றும் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.

இதில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதனை பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ‘பன்றி’ உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்டை ஆசிய கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என ஐ.சி.சி.க்கு கோரிக்கை வைத்தது. ஆனால் ஐ.சி.சி., பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் கை குலுக்காததை சர்ச்சையாக்க தேவையில்லை என இந்திய முன்னாள் கபில் தேவ் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவை குறை சொல்லாமல் கிரிக்கெட்டில் முன்னேறும் வழியைப் பார்க்குமாறு அவர் பாகிஸ்தானை விளாசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இவை எல்லாமே சிறிய விஷயங்கள். ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கை குலுக்க விரும்பவில்லை என்றால், அதை இரு தரப்பினரும் பெரிய பிரச்சினையாக்க தேவையில்லை. தவறான கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல, ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை.அவர்கள் அதில் முன்னேற்றம் காணும் வழியை தேட வேண்டும். கை குலுக்குவது அல்லது கட்டிப்பிடிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அணி கடந்த 20 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் அணி அபாரமாக செயல்படுகிறது. நமது கிரிக்கெட் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 2025 ஆசிய கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.