கொழும்பு,
ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (வயது 54) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த செய்தி இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவி லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடினார். இந்த போட்டி முடிவடையும் முன்னரே அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனினும் போட்டி முடிவடைந்த பிறகே இந்த அதிர்ச்சி செய்தி இலங்கை அணி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அணியின் பயிற்சியாளர் மற்றும் மேலாளர் இருவரும் துனித் வெல்லாலகேவிடம் இந்த துயர செய்தியைக் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை கேட்டு அவர் மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார். பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அவருக்கு ஆறுதல் அளித்தனர். இதன் காரணமாக அணியின் வெற்றி கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது. சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணியின் வெற்றி சோகத்தில் முடிவடைந்துள்ளது.
துனித் வெல்லாலகேவின் தந்தை உயிரிழந்த செய்தியானது இலங்கை அணி வீரர்களை மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனித் வெல்லாலகேவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெல்லாலகே தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அவர் மீண்டும் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.