பீஜிங்,
தைவானில் கடந்த திங்கட்கிழமை முதல் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த புயல் தற்போது சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்கிறது. ஹாங்காங்கையும் தாக்கி வருகிறது.
இந்நிலையில் தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கியபோது, 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. தொடர் கனமழையால் மலை பகுதியில் அமைந்த ஏரி ஒன்று உடைந்தது. இதில், பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது.
ஏரியில் இருந்த வெள்ள நீர் குவாங்பு நகருக்குள் புகுந்து நகரையே புரட்டி போட்டது. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 124 பேரை காணவில்லை. ஆயிரம் பேர் வசிக்க கூடிய தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், புயல் தைவானை கடந்து, சீனாவை நோக்கி பயணிக்கிறது. நடப்பு ஆண்டில் வலுவான புயலாக இது பார்க்கப்படுகிறது. இதனால், ஹாங்காங்கில் கடல் அலைகள் கடுமையாக உயரே எழுந்தன. ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சீனாவின் பல்வேறு நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகள் கூட காலியாக கிடந்தன. சாலைகளில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த புயலால், மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இது 230 கி.மீ. வரை வேகமெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் கடலோர பகுதியை புயல் நெருங்கியுள்ளது. பிலிப்பைன்சில் புயலால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர். கார்கள், பைக்குகள் தூக்கி வீசப்பட்டன. அவை ஒன்றன் மீது ஒன்றாக கிடந்தன. ஹாங்காங்கில் உச்சபட்ச புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நாளை காலை வரை புயலின் தாக்கம் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.