புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரங்கள் வாயிலாக ஊக்குவித்த பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் சூதாட்ட செயலியோடு தொடர்புடைய பல பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முன்தினம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை நேற்று விசாரித்தனர். மதியம் 12 மணி அளவில் யுவராஜ் சிங் தன் வக்கீல் குழுவுடன் வந்தார். பின்னர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் தனியாக சென்ற அவர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணையை எதிர்கொண்டார். இதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதற்கு யுவராஜ்சிங் அளித்த பதில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.