Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்"- தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்ததை அடுத்து, கோவையில் ப்ரீ ரிலீஸ் ரீவண்ட் நடைபெற்றது. இப்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா

இதில் பேசியிருக்கும் நடிகர் தனுஷ், “ரொம்ப குடும்ப கஷ்டம், அப்பா கிட்ட காசு இல்லை, பொழப்புத் தேடி சென்னைக்குப் போகலாம்னு இருந்தாங்க அப்பா, ஆனால், அதுக்குக்கூட அவர்கிட்ட காசு இல்லை.

மதுரையில ஒரு சொந்தக் காரங்க கிட்ட காசு வாங்கிட்டு போகலாம்னு இருந்தப்போ, மதுரை போக கூட காசு இல்லை. அப்பாவும், குழந்தைய சுமந்துகிட்ட இருக்க எங்க அம்மாவும் சுமார் 120 கிலோ மீட்டர் நடந்தே மதுரை வந்தாங்க.

இப்போ மதுரையில நான் இங்க இந்த மேடையில இருக்கேன். எங்க அப்பாவும், அம்மாவும் அன்னைக்கு நடந்தே வந்து, இன்னைக்கு இந்த மேடையில என்னை ஏத்தியிருக்காங்க. அவங்கள இங்க கூட்பிட்டு வந்து, இந்த மேடையில ஏத்தியிருந்தா மனசுக்கு நிறைவாக இருந்திருக்கும். ஆனால், அவங்கனால இங்க வார முடியல. என்னைப்போல என் ரசிகர்கள் எல்லோரும் இதுபோல பல மேடைகள் ஏறனும், முன்னேறனும்.

ஆடுகளம் படப்பிடிப்பு, நடு ரோட்ல ஆடுனேன்

மதுரை நான் ஓடி, ஆடி, விளையாடிய ஊர். ‘ஆடுகளம்’ படத்தப்போ, ‘ஒத்த சொல்லால’ பாட்டுக்கு யாருக்கும் தெரியாமல், நடு ரோட்ல இறங்கி ஆட சொன்னாங்க. உண்மையிலேயே நடு ரோட்ல இறங்கு ஆடுனேன். பார்க்க மதுரை பையனவே இருந்ததால யாரும் என்னை கண்டுபிடிக்கல. அப்போ நம்மளும் மதுரை பையன்தானு ரொம்ப சந்தோஷ பட்டேன். மதுரை என்னோட மனசுக்கு நெருக்கமான ஊர்.” என்று பேசியிருக்கிறார்.

நான் பார்த்து வளர்ந்த குழந்தை இன்பநிதி

‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன், இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சென்னை, கோவை, மதுரை என பல நிகழ்ச்சிகளை நடத்தி, என் ரசிகர்களையும் மகிழ்வித்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.

இப்படத்தை விநியோகம் செய்யும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் இன்பநிதிக்கும் என்னோட வாழ்த்துகள். குழந்தையிலிருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். ‘ரெட் ஜெயண்ட்’ இன்பநிதி வழங்கும் என்று திரையில் வரும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.