புதுடெல்லி,
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,
அணியை கேப்டனாக வழிநடத்துவது எந்த ஒரு கிரிக்கெட்டருக்கும் மிகவும் சிறப்பான தருணம் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் அணியை வழிநடத்துவது மேலும் சிறப்பானது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது.
நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை. அணியை வழிநடத்துவது என்பது என்னுடைய கனவில் மட்டுமே இருந்தது. சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பைத் தொடர் எங்களுக்கு மிகவும் அற்புதமானதாக அமையப் போகிறது என நினைக்கிறேன். இந்த தொடர் முழுவதும் எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.