மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறி சிக்கிக்கொண்ட 36 பக்தர்கள் மீட்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை வனப்பகுதியில் வழி தவறி சிக்கி தவித்த 36 பக்தர்களை வனத்துறையினர் மற்றும் போலீஸார் மீட்டனர்.

மேட்டூர் அருகே பாலமலையில் சித்தேஸ்வரன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் நடந்து செல்லும் பாதை குறுகலாகவும், அடர்ந்த வனப்பகுதியாகவும் உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் வனப்பகுதி வழியாக சித்தேஸ்வரன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இன்று மாலை வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினர். அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 36 பேர் வழி தவறி சென்று அடந்த வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

அனைவருடைய செல்போன் சிக்னலும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒருவருடைய செல்போனில் மட்டும் சிக்னல் இருந்தது. இதனிடையே, அந்த நபர் உடனடியாக காவல் உதவி மைய எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொளத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மேட்டூர் வனத்துறையினர் மற்றும் போலீஸார் பாலமலை வனப்பகுதிக்குள் சென்று நீண்ட நேரம் தேடி 36 பேரையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை போலீஸார் வழங்கினர். பின்னர் அவர்களை வனப்பகுதியில் இருந்து அழைத்து வந்து அறிவுரை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.