செங்கல்பட்டு: ‘கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம். வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், “திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “ சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக உருவானபோது, அண்ணா சொன்னார்… “திமுக தோன்றிவிட்டது; திகவுக்கு எதிராக அல்ல. திராவிடர் கழகத்தின் கொள்கைகளை மேலும் வலிமையாகச் சொல்வதற்கும், அரசியல் களத்தில் செயல்படுத்துவதற்கும் தான் தோன்றி இருக்கிறது” என்று சொன்னார். ஒரு காலத்தில், பெரியார் பகுத்தறிவுப் பரப்புரையை மேற்கொண்டு வீதிகளில் வந்தபோது, சிலர், செருப்பு வீசினார்கள், கல் வீசினார்கள், ஏன், கத்திகூட வீசினார்கள். ஆனால், இன்றைக்கு பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.
திருச்சி சிறுகனூரில் உருவாகிக் கொண்டு வருகின்ற ’பெரியார் உலகத்துக்கு’ திமுக-வின் 126 எம்எல்ஏக்கள், மக்களவை – மாநிலங்களவையைச் சார்ந்திருக்கக்கூடிய 31 எம்.பி.,க்கள் ஆகியோருடைய ஒரு மாதச் சம்பளத்தையும் சேர்த்து வழங்குவோம் என்று சொன்னார்கள். எங்கள் எல்லோருடைய ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய். அந்தப் பணத்தை பெரியார் உலகத்துக்கு மகிழ்ச்சியோடு, நன்றி உணர்வோடு வழங்குவதில் நாங்கள் எல்லோரும் பெருமை அடைகிறோம்.
தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதை பார்க்கும் வாய்ப்பு பெரியாருக்குத்தான் கிடைத்தது. அண்ணா சுயமரியாதை திருமணச் சட்டத்தை இயற்றினார். கருணாநிதி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கினார். அதன் நீட்சியாகதான் சமூகநீதிக்கான இட ஒதுக்கீடுகள் – மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் என்று ஏராளமானவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த தமிழ்ச் சமூகம் சிந்தனை ரீதியாக முன்னோக்கிச் செல்ல நம்முடைய திராவிட மாடல் அரசு செய்துள்ள முன்னெடுப்புகளில் சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி ஆணைகள் வழங்கி இருக்கிறோம். சாதி வேறுபாடு மட்டுமல்ல, பால் பேதத்தையும் உடைத்து, பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.
பெரியார் பிறந்த நாளிலும், அம்பேத்கர் பிறந்தநாளிலும், தமிழ்நாடே முக்கிய நாளாக கருதி உறுதிமொழி எடுக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கின்ற ‘காலனி’ என்ற சொல்லை அகற்ற அறிவித்திருக்கிறோம். சாதி பெயரில் இருக்கின்ற விடுதிகளை, சமூகநீதி விடுதிகளாக மாற்றியிருக்கிறோம்.
இந்தியப் பிரதமர் அவர்களை சந்தித்து, சாதிப் பெயர்களின் இறுதி எழுத்து, ‘R’ என முடிவடையும்படி மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.
சிலர் கேட்கிறார்கள், “இவர்கள் பவள விழா கொண்டாடுகிறார்கள், நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.. ஆனால், இங்கே எதுவும் மாறவில்லையே” என்று கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்வியில் இருப்பது, அக்கறை இல்லை; ஆணவம். “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை பாருங்கள்” என்கிற சவால் அது.
இங்கே கூடியிருக்கும் நம்முடைய தோழர்களுக்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது – இந்த நூறு ஆண்டுகளில், நாம் மாற்றத்திற்கான விதைகளை மட்டும்தான் விதைத்திருக்கிறோம். இங்கே எதுவுமே மாறக் கூடாது என்று நினைப்பவர்கள் எப்படியெல்லாம் – என்னவெல்லாம் சதித் திட்டம் போடுகிறார்கள் என்று நாட்டில் நடக்கின்ற செய்திகளை உற்றுப் பாருங்கள்.
தமிழ்நாடு ஏன் தனித்து, உயர்ந்து நிற்கிறது என்பது புரியும். பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள், அண்ணா எழுந்தார். அடுத்து கருணாநிதி வந்தார். கருணாநிதிக்குப் பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் என்றார்கள்.மக்களின் ஆதரவோடு நான் வந்தேன். என்னைப் பற்றி என்னென்னவோ பொய்களை எல்லாம் பரப்பி பார்த்தார்கள், இப்போதும் பரப்புகிறார்கள். நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டுமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த இயக்கத்தின் கொள்கைகள் தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கின்ற கொள்கைகள், கடைசித் தமிழரின் மூச்சு இருக்கும் வரை, அவர் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்பேர்பட்ட எதிரிகள் வந்தாலும் இந்த இனம் சளைக்காமல் போராடும். சிலர் தி.மு.க-வை பிடிக்காது என்று சொல்வார்கள், அதற்கு பொருள், ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது. இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ் என்ற வருவது பிடிக்காது.
இடஒதுக்கீடு பிடிக்காது. சமூகநீதி பிடிக்காது. சமத்துவம் பிடிக்காது. சரிசமமாக உட்காருவது பிடிக்காது. எல்லோரும் கோயிலுக்குள் நுழைவது பிடிக்காது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது. ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது. தமிழ் பிடிக்காது. தமிழர்கள் பிடிக்காது, நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது.
இந்த நூறாண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மக்களுக்கு கிடைத்ததை, வேக வேகமாக பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் தேடித் தந்த உயர்வை பறிக்கின்ற சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியலை பின்னுக்குத் தள்ளி, பிற்போக்குத்தனங்களையும், ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான சூழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகின்ற அரண்தான், திராவிட மாடல். அடுத்து, திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம். வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது; தமிழினம் தன்னை காத்துக் கொள்ள வேண்டிய சமுதாய தேர்தல்.
கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம். வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், “திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தவேண்டும். அதற்கான கொள்கை தெளிவும், போராட்டக் குணமும், செயல்திட்டமும் , ஒற்றுமை உணர்வும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குதான் இருக்கிறது. எனவே, ஏழாவது முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திட, இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்