ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் சாண்டில்வுட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1′.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. விஷுவலாக முழுமையான திரையரங்க அனுபவத்தைத் தரும் இப்படம் `காந்தாரா’ முதல் பாகத்தின் பிளாஷ்பேக் கதையைச் சொல்கிறது.
ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சம்பத் ராமும் நடித்திருக்கிறார்.

கதம்பர்கள் இனத்தின் தலைவனாக உடல் முழுக்க அடையாளமே தெரியாதளவிற்கு கறுப்பு நிற மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்.
படம் வெளியானப் பிறகு அக்கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இவர்தான் என தமிழ் ரசிகர்கள் அடையாளப்படுத்தி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
நாமும் பட வெற்றிக்கு அவரிடம் வாழ்த்துகள் சொல்லி `காந்தாரா’ பட அனுபவத்தைக் கேட்டோம்.
உற்சாகத்தோடு பேசிய சம்பத் ராம், “வணக்கம்ங்க. நான் இப்போ கோவாவுல இருக்கேன். நான் இன்னும் படம் பார்க்கல. ஆனா, வர்ற விமர்சனங்கள் ரொம்பவே மகிழ்ச்சியைத் தருது. `காந்தாரா சாப்டர் 1′ படத்தின் பயணம் ரொம்பவே அழகானது. கதம்பர்கள் இன மக்களின் தலைவனாக இந்தப் படத்துல நான்தான் நடிச்சிருக்கேன்னு நிறைய பேருக்கு தெரியாது.
படத்துல இயக்குநர் ரிஷப் ஷெட்டி என்னை கமிட் பண்ணும்போதே, `முழு மேக் அப் இருக்கும். நீங்கதான் நடிச்சிருக்கீங்கனு நிறைய பேருக்கு தெரியாது’னு சொல்லிதான் கமிட் பண்ணினாங்க. நானுமே இந்தப் படத்துல நடிக்கிற தகவலை வெளில யார்கிட்டையும் சொல்லல.

சொல்லப்போனால், படத்துல நடிக்கத் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ஒய்ஃப், குழந்தைகள்கிட்ட சொன்னேன். இப்போ படம் வெளிவந்ததும்தான் பொதுவெளியில நான்தான் அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன் அறிவிச்சேன்.
சிறிய நேரம் மட்டுமே என்னுடைய கதாபாத்திரம் வந்தாலும் அது கொடுத்திருக்ககூடிய தாக்கம் அதிகம்னுதான் சொல்லணும். நான் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே தமிழ் ஆடியன்ஸ் நிறையப் பேர் என்னுடைய குரலை வச்சு நான்தான் நடிச்சிருக்கேன்னு அடையாளப்படுத்தி சொன்னாங்க.
அதுவே பெரிய மகிழ்ச்சிங்க.” என்றவர், நான் கன்னடத்துல `சைனைட்’னு ஒரு திரைப்படம் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல நம்ம இயக்குநர் ரிஷப் ஷெட்டி உதவி இயக்குநராக வேலைப் பார்த்தாரு. அப்போதுல இருந்தே அவர் எனக்கு பழக்கம்.
ரிஷப் ஷெட்டி சார் இயக்குநராக செய்த படங்களையும் நான் தொடர்ந்து பாலோவ் பண்ணீட்டுதான் இருந்தேன். `காந்தாரா’ திரைப்படம் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளானது.
̀சைனைட்’ படத்துல என்னுடைய பெயர் மாஸ்டர்னு வரும். அப்போதுல இருந்தே என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார். ̀காந்தாரா’ ரிலீஸுக்குப் பிறகு நண்பர்கள் மூலமாக ரிஷப் ஷெட்டி சார் நம்பர் வாங்கி மெசேஜ் பண்ணி வாழ்த்துச் சொன்னேன்.
உடனடியாக, அவரும் எனக்கு கால் பண்ணி “மாஸ்டர் எப்படி இருக்கீங்க. அடுத்தப் படத்துல பண்றோம்’னு சொல்லியிருந்தாரு.

சொன்னதுபோலவே, `காந்தாரா சாப்டர் 1′ படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு கால் பண்ணி கூப்பிட்டாரு. நான் வேறொரு இடத்துக்கு போக வேண்டிய அவசர சூழல்ல ஆடிஷன் செய்தேன்.
சொல்லப்போனால், அந்த ஆடிஷனை நான் சரியாக பண்ணலனு எனக்கே தோனுச்சு. நான் தெலுங்கு பேசுவேன். ஆனா, கன்னட மொழியை மனப்பாடம் பண்ணிதான் பேசவேன்.
மூணு, நாலு வரிகள் இருந்தா, ஈஸியா மனப்பாடம் செய்து பண்ணிடலாம். ஆனா, ஆடிஷன் செய்த கேரக்டருக்கு பக்கங்கள்ல வசனங்கள் இருந்தது. மதியம் வரைக்கும் ஆடிஷன் நடந்தது. சரியாக ஆடிஷன் செய்யாத நான் பார்ப்போம்னு விட்டுடேன்.
ஆனா, ஆடிஷன் அட்டென்ட் பண்ணின இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி சார் டீம்ல இருந்து லுக் டெஸ்ட்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. எனக்கு அது சர்ப்ரைஸிங்காக இருந்தது. அங்கப்போனப் பிறகுதான் நான் ஆடிஷன் செய்த கதாபாத்திரம் இல்ல, இது வேற கதாபாத்திரம்னு எனக்கு தெரிஞ்சது.
என்னை நம்பி இந்த வாய்ப்பைத் தந்த ரிஷப் ஷெட்டி சாருக்கு நன்றியைச் சொல்லிக்கிறேன். அவர்கூட பணியாற்றியதும் ஒரு அழகான அனுபவம்ங்க. இப்போ இந்த பிரமாண்ட படைப்பைக் கொடுத்தவர் படப்பிடிப்பு தளத்துல எனக்கான இடத்தையும் அவர் கொடுத்தாரு.
இந்தப் படத்தை முழுவதுமாக அவர் வாழ்ந்த ஊரிலேயேதான் செட் போட்டு எடுத்தாரு. காட்டுல படப்பிடிப்புகள் எடுப்பதுமே சவால்தான். ஆனா, எனக்கு எந்த விதத்திலும் எதுவுமே ஆகல.” என்றார்.
̀̀முகம் தெரியாமல் இருக்கும் கதாபாத்திரம், இதுல நம்ம நடிக்கணுமானு எனக்கு எந்த தயக்கமும் வரல. நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துல நடிக்கணும், இந்தப் படத்துல ஒரு பகுதியாக இருக்கணும்னுதான் எனக்கு எண்ணம் இருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் நானும் படத்துல நடிச்சுட்டேன்.
மேக்கப்தான் ரொம்பவே கஷ்டமான ப்ராசஸ்னு சொல்லலாம். ஏன்னா, எனக்கு மட்டும் தினமும் இரண்டு மணி நேரம் மேக்கப் போடணும். காலையில 7 மணிக்கு ஷாட் இருந்தால் அதுக்கு முன்னாடியே வந்து மேக்கப் போட்டு தயாராகிடுவேன்.
மேக்கப் போட்டப் பிறகு எதையுமே செய்ய முடியாது. சிலை மாதிரி ஒரே இடத்துலதான் உட்கார்ந்திருக்கணும். மொத்தமாக 25 நாள் நடிச்சிருப்பேன்.
ஆனா, படப்பிடிப்பு எனக்கு ஒரே நேரத்துல தொடர்ந்து இல்ல. குறிப்பிட்ட தேதிகள்ல மட்டும் என்னைக் கூப்பிட்டிருந்தாங்க.
ஷூட் முடிச்சிட்டு வந்து அந்த மேக்கப் ரிமூவ் பண்றதுக்கே ஒரு மணி நேரம் ஆகும். அதுவே ரொம்ப பெரிய வேலை. குளிச்சிட்டு வந்தால் தரை முழுக்க கறுப்பு நிறம் படிந்திடும். நான் சந்திச்சது பெரிய கஷ்டமே கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்ல இந்தப் பிரமாண்ட படைப்பை உருவாக்க பலரும் ரொம்ப கஷ்டங்களைச் சந்திச்சாங்க.

சில நாட்கள்ல மேக்கப் போட்டு ஈவ்னிங் நேரத்துலதான் எனக்கு ஷாட் வரும். மேக்கப் போட்டு எனக்கு ஷாட் இல்லாமல் போன நாட்களும் இருக்கு. என்னுடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைக்குதுனா அதுக்கு முக்கிய காரணம் இயக்குநர்தான்.
நான் என்ன செய்யணுமோ, அதை அவரே நடிச்சுக் காட்டுவாரு. அதுல நான் 70 சதவீதம் முழுமையாக செய்திருந்தாலே பெரிய விஷயம்ங்க. அவர் படத்துக்கு அபரிமிதமான உழைப்பைத் தந்திருக்கார். படத்தோட க்ளைமேக்ஸ்ல என்னை கொலை செய்கிற சீன்ல எனக்கு ரோப் போட வேண்டியது இருந்தது.
ரிஷப் ஷெட்டி தயங்கியபடி என்கிட்ட `மாஸ்டர் ரோப் ஷாட் எடுக்கணும். போடலாமா’னு கேட்டாரு. இத்தனை வருஷமா நான் எத்தனையோ படங்களுக்கு ரோப் போட்டிருக்கேன்.
அவர் எனக்கு மரியாதை தந்து அந்த விஷயத்தை கேட்டு பண்ணினது ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள்ல அவர் மாறியிருப்பார்னு நினைச்சேன்.

ஆனா, நான் அன்னைக்கு பார்த்த அதே மழலைத்தனமும், புன்முறுவலும் இன்னும் அப்படியே அவர்கிட்ட இருக்கு. இப்படிதான் இந்த `காந்தாரா பயணம் முழுவதும் நகர்ந்துச்சு!” என மென்மையாக சிரித்தவர், “அடுத்தும் தமிழ், மலையாளம், தெலுங்குனு சில படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஒவ்வொரு மகிழ்ச்சியான விஷயங்களும் அடுத்தடுத்து அமையும்னு எதிர்பார்க்கிறேன்!” என்றபடி முடித்துக் கொண்டார்.