பொதுவாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முஸ்லீம்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ஹிந்து மதத்தை சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தான் அணியில் விளையாடி உள்ளனர். ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருந்ததன் காரணமாக, தான் எதிர்கொண்ட மத பாகுபாடுகள் மற்றும் கொடுமைகள் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிதைத்ததாகவும், தன்னை மதம் மாற சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
Add Zee News as a Preferred Source
மதப் பாகுபாடும், அப்ரிடியின் வற்புறுத்தலும்
பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், தனது மத நம்பிக்கைகளின் காரணமாக, சக அணி வீரர்களிடமிருந்து பல்வேறு தொந்தரவுகளை சந்தித்ததாக கனேரியா வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஒரு மாநாட்டில் பேசிய கனேரியா, “நான் பாகிஸ்தானில் பெரும் மத பாகுபாட்டை எதிர்கொண்டேன், எனது கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டது. எனக்கு உரிய மதிப்பும், சம உரிமையும் அங்கு கிடைக்கவில்லை. இந்த கொடுமைகளால் தான் நான் இன்று அமெரிக்காவில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “அணியில் இருந்த பல வீரர்கள் என்னுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட மறுத்தார்கள். ஷாஹித் அப்ரிடிதான் என்னை மதம் மாற சொல்லி பலமுறை வற்புறுத்திய முக்கிய நபர். ஆனால், அப்போதைய கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் ஒருபோதும் அவ்வாறு பேசியதில்லை” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இன்சமாம்-உல்-ஹக் மற்றும் சோயப் அக்தர் ஆகிய இருவர் மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் கனேரியா குறிப்பிட்டுள்ளார்.
இர்ஃபான் பதானின் கருத்து
சமீபத்தில், இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஷாஹித் அப்ரிடியை “பழக்க வழக்கங்கள் சரியில்லாதவர்” என்று ஒரு பேட்டியில் விமர்சித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டேனிஷ் கனேரியா, “இர்ஃபான் பாய், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அவர் எப்போதும் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவார். அது ஒருவரின் குடும்பமாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி. கண்ணியமும், நாகரிகமும் அவரிடம் இல்லை” என்று பதிவிட்டிருந்தார். இது, இருவருக்கும் இடையே இருந்த பனிப்போரை மீண்டும் உறுதி செய்தது.
கனேரியாவின் கிரிக்கெட் வாழ்க்கை
பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 261 விக்கெட்டுகளை வீழ்த்திய கனேரியா, அனில் தல்பத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இரண்டாவது ஹிந்து ஆவார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசமாக இருந்தபோதிலும், 2012ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஸ்பாட்-ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், தனது கிரிக்கெட் வாழ்க்கை வீழ்ச்சியடைந்ததற்கு மத ரீதியாக தான் தனிமைப்படுத்தப்பட்டதும், தனக்கு உரிய ஆதரவு கிடைக்காததுமே முக்கிய காரணம் என கனேரியா தொடர்ந்து கூறி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளை ஷாஹித் அப்ரிடி மறுத்து, கனேரியாவை ஒரு “பொய்யர்” என்று அழைத்தாலும், கனேரியாவின் தொடர்ச்சியான குரல், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவிய மத பாகுபாட்டின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
About the Author
RK Spark