வாஷிங்டன்,
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை பலமுறை கூறினார். இந்த நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, வரி விதிப்புகளில் உங்களது நிலைப்பாட்டை மாற்றுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:-எனக்கு வரி விதிப்பு அதிகாரம் இல்லையென்றால் 7 போர்களில் குறைந்தது 4 போர்களாவது வெடித்திருக்கும். போர்களை நிறுத்த நான் வரிகளைப் பயன்படுத்துகிறேன். எனது நிர்வாகத்தின் வரி விதிப்பு பயன்பாடு அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுக்கவும் உதவியது. இந்தியா-பாகிஸ்தான் போரை தொடங்க தயாராக இருந்தனர். அவர்களிடம் நான் வரி மற்றும் வர்த்தகம் குறித்து சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதையடுத்து அவர்கள் சண்டையை நிறுத்தினர். நாங்கள் வரி விதிப்பதன் வாயிலாக அமைதியை உருவாக்கும் படையினராகவும் மாறி இருக்கிறோம் என்றார்.