புதுடெல்லி,
மும்பையில் விமான பயண நெரிசலை தவிர்க்க 2-வது சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையை அடுத்த நவிமும்பையில் விமான நிலையம் கட்டும் பணி தொடங்கியது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் இந்த சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) பிற்பகலில் நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று மும்பை வருகிறார்.
பிரதமர் மோடி நவிமும்பை விமான நிலையத்தை திறந்து வைப்பதுடன் மும்பை மெட்ரோ ரெயில் 3-வது வழித்தடத்தில் 2-பி கட்டத்தையும் திறந்து வைக்கிறார். அதாவது ஆச்சார்யா அட்ரே சவுக் முதல் கப்பரேடு வரை இந்த புதிய பாதையை அவர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த பாதை ரூ.12 ஆயிரத்து 200 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ரூ.37 ஆயிரத்து 270 கோடியில் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்ட மும்பை மெட்ரோ 3-வது வழித்தடம் முற்றிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இதேபோல ஒருங்கிணைந்த ‘மும்பை ஒன்’ போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்கு மத்தியில் மும்பை வரும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மேம்பாடு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதேபோல இரு தலைவர்களும் நாளை மும்பையில் நடைபெறும் நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பிரதிநிதிகள் குழுவினருடன் நேற்று லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டார். பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதால், மும்பை, நவிமும்பை பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.