எஸ்.ஐ, தீயணைப்புத் துறை காலி பணியிட இறுதி தேர்வு பட்டியலை வெளியிட ஐகோர்ட் 30 நாட்கள் கெடு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், கடந்த 2023 ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முக தேர்வு போன்ற தேர்வு நடைமுறைகள் முடிந்து 2024 ஜனவரி மாதம் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், 2024 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள், இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமித்தும் உத்தரவிடப்பட்டது.

புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவர் அதனை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலுடன் கூடிய அறிக்கையை, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார் சமர்ப்பித்தார்.

ஆனால், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை என்பதால், அந்த பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும், இப்பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, இட ஒதுக்கீடு நடைமுறை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றியும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை சட்டத்தை பின்பற்றியும் தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை. தனி நீதிபதி உத்தரவை ஏற்றுக் கொண்ட நிலையில், தாமதமாக இந்த மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்த குமார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 30 நாட்களில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.