ஜெய்ப்பூர்,
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியமர்த்துவதைத் தடைசெய்யும் ‘ராஜஸ்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தம்) அவசரச் சட்டம், 2025’-க்கு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தடை உத்தரவு தொடர்பாக ராஜஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமானது, தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வயது 12-ல் இருந்து 14 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 14-18 வயதுடைய இளம் பருவத்தினர் இனி இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்டம் குழந்தைகளுக்கு சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வியை சிறப்பாகப் கிடைப்பதை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டம் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கிறது, அதே நேரத்தில் கூடுதல் வேலை நேர வரம்பு ஒரு காலாண்டிற்கு 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.