புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத அடையாளத்துடன் தொடர்புடையது. ஆரிய சமாஜம் இந்திய மதிப்புகளைப் பற்றி அச்சமின்றிப் பேசிய ஒரு அமைப்பு. சுவாமி தயானந்த சரஸ்வதி தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவர்.
அந்தக் காலத்தில் நிலவிய தீமைகளை ஒழித்து பெண்களுக்கு அதிகாரம் அளித்ததில் சுவாமி தயானந்த சரஸ்வதி பெரும் பங்கு வகித்தவர். இன்று நமது மகள்கள் போர் விமானங்களை ஓட்டுகிறார்கள். ட்ரோன்களை இயக்குகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் தலைமைப் பதவிகளை வகித்து வருகிறார்கள். இந்த வார தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.

கடந்த ஆண்டு குஜராத்தில் தயானந்த சரஸ்வதியின் பிறந்த இடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்பாக டெல்லியில் அவரது 200வது பிறந்த நாள் விழாவை தொடங்கிவைக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. 200வது பிறந்த நாள் விழாவை, இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான அறிவுசார் யாகமாக நடத்த நாங்கள் அனைவரும் முடிவு செய்தோம். இந்த அறிவுசார் யாகம், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன்” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையும், ஆர்ய சமாஜத்தின் 150-வது ஆண்டையும் குறிக்கும் வகையில் நினைவு நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.