ICC Women’s World Cup 2025 Final, IND-W vs SA-W: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று (நவ. 2) நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
Add Zee News as a Preferred Source
IND-W vs SA-W: புதிய சாம்பியன் யார்…?
இது 13வது ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் ஆகும். இதுவரை ஆஸ்திரேலிய அணி 7 முறையும், இங்கிலாந்து அணி 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. அந்த வகையில், நடப்பு தொடரில் மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு புதிய சாம்பியன்கள் இன்று கிடைக்க இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதல்முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது, ஆடவர் அணி இதுவரை அரையிறுதியை தாண்டியதே இல்லை.
இந்திய மகளிர் அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதற்கு முன், 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியனாகும் வாய்ப்பை இழந்திருந்தது. அந்த வகையில், இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக விளங்குகிறது.
IND-W vs SA-W: உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கம்
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தென்னாப்பிரிக்காவே வென்றிருக்கிறது. நடப்பு தொடரின் லீக் போட்டியில் கூட தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியிருந்தது. தென்னாப்பிரிக்காவின் கீழ் வரிசை பேட்டரான நாடின் டி கிளார்க் 54 பந்துகளில் 84 ரன்களை அடித்து அன்று இந்திய அணியை அலறவைத்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தினாலும், பொதுவாக இரு அணிகளும் 1997ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 34 போட்டிகளை விளையாடி உள்ளது. அதில் 20 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது, 13 போட்டிகளை தென்னாப்பிரிக்கா வென்றிருக்கிறது. ஒரு போட்டிக்கு மட்டும் முடிவில்லை.
IND-W vs SA-W: மிரட்டும் தென்னாப்பிரிக்கா அணி
அந்த வகையில் இரு அணிகளும் பலம் பொருந்திய அணியாக காட்சியளிப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என கணிப்பது மிக மிக கடினம். தென்னாப்பிரிக்காவை பொருத்தவரை கேப்டன் லாரா வால்வார்ட் 8 இன்னிங்ஸில் 470 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் லாரா 143 பந்துகளில் 169 ரன்களை குவித்து மிகப்பெரிய வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு நுழைந்திருக்கிறார். அதேநேரத்தில், தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை பொருத்தவரை மாரிசேன் காப், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளார்க், க்ளோ ட்ரையன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்துவீச்சில் மாரிசேன் காப், நோன்குலுலேகோ மிலாபா, நாடின் டி கிளார்க் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தென்னாப்பிரிக்கா 7 லீக் போட்டிகளில் 5இல் வென்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தது.
IND-W vs SA-W: நம்பிக்கை அளிக்கும் இந்திய பேட்டிங்
இந்திய அணியை பொருத்தவரை 7 லீக் போட்டிகளில் 3இல் மட்டும் வென்று மூன்றில் தோற்று அரையிறுதிக்கு கடைசியாக முன்னேறியது. ஒரு போட்டிக்கு மட்டும் முடிவில்லை. இன்றும் இந்திய அணி பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரையே அதிகம் நம்பியிருக்கிறது. தீப்தி சர்மா இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரிச்சா கோஷ் அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போட்டியில் பெரிய தாக்கத்தை செலுத்தலாம். கடந்த போட்டியின் மூலம் தொடரில் கால் பதித்திருக்கும் ஷபாலி வர்மா, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் இப்போட்டியில் எவ்வித அழுத்தமும் இன்றி அவரது அதிரடி பாணியை களத்தில் காண்பித்தால் சிறப்பான ஓபனிங் கிடைக்கும்.
Navi Mumbaifor the #CWC25 Final!#TeamIndia | @ImHarmanpreet pic.twitter.com/fnGRS1cNXm
— BCCI Women (@BCCIWomen) November 1, 2025
IND-W vs SA-W: பந்துவீச்சில் கூடுதல் கவனம் தேவை
பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ரன்களை கட்டுக்கோப்பாக வழங்க இவர்கள் முயர்சிக்க வேண்டும். காரணம், தீப்தி சர்மாவின் பந்துவீச்சு சராசரி 24.12, ஸ்ரீ சரணியின் சராசரி 26.08, கிராந்தியின் சராசரி 38.33 ஆக உள்ளது கவனிக்கத்தக்கது. இவர்களுடன் அனுபவ வீராங்கனை ரேணுகா சிங், ராதா யாதவ், அமன்ஜோத் கவுர் ஆகியோரும் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்திய அணி பந்துவீச்சு தாக்குதலோடு செல்லுமா அல்லது ஹர்லின் தியோலை கொண்டுவந்து கூடுதல் பேட்டிங் ஆப்ஷனுடன் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
IND-W vs SA-W: ஆடுகளம் எப்படி இருக்கும்?
இன்று போட்டி நடைபெறும் நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களை கொண்டதாகும். மேலும், இரவு நேரத்தில் பனியின் தாக்கமும் இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் உண்டாகும். கடைசியாக இங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 330 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த போட்டியில் இந்தியா 339 ரன்களை இங்கு சேஸ் செய்திருக்கிறது என்பதையும் இங்கு நாம் மறக்க வேண்டாம்.
IND-W vs SA-W: மழைக்கு வாய்ப்புள்ளதா?
இந்தச் சூழலில், யார் டாஸ் வென்றாலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்வார்கள். இறுதிப்போட்டி என்பதால் அழுத்தம் அதிகமாக இருக்கும், இதனால் சேஸிங்கும் அவ்வளவு எளிதாக இருக்காது. நவி மும்பையில் தற்போதைய சூழலில் மழை பெய்ய 25 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது மழை வந்து இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றாலும், கவலையளிக்கக் கூடிய ஒன்றாக இல்லை.
IND-W vs SA-W: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கௌட்
தென்னாப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), அயபோங்கா காக்கா, மரிசான் கேப், க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், நோன்குலுலேகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், சுனே லூஸ்.
IND-W vs SA-W: நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும். டாஸ் மதியம் 2.30 மணிக்கு வீசப்படும். இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் Star Sports நெட்வோர்க்கின் சேனல்களில் பார்க்கலாம். மேலும் Jio Hotstar ஓடிடி தளத்திலும் நீங்கள் போட்டியின் நேரலையை கண்டுகளிக்கலாம்.
IND-W vs SA-W: ஜீ தமிழ் நியூஸ் லைவ் ஸ்கோர்கார்டு + வர்ணனை
மேலும், போட்டியை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக நமது ஜீ தமிழ் நியூஸ், புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டை தமிழ் வர்ணனையுடன் கிரிக்கெட்டை கொண்டாடும் ரசிகர்களுக்காக வழங்க இருக்கிறோம். நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் தொடர்ச்சியாக முக்கிய கிரிக்கெட் போட்டிகளுக்கு இதுபோல், தமிழ் வர்ணனையுடனான லைவ் ஸ்கோர்கார்டை யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் மூலம் வழங்கி வரும் நிலையில், மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அதே ஏற்பாட்டை செய்துள்ளது. மேலும், இம்முறை கூடுதல் சிறப்பம்சமாக எங்களின் வர்ணனையாளர் குழுவில் கிரிக்கெட் பயிற்சியாளர்கள், வல்லுநர்கள் கலந்துகொண்டு போட்டியின் ஒவ்வொரு பந்தையும் விரிவாக வர்ணனை செய்து கிரிக்கெட்டை கொண்டாட இருக்கின்றனர்.
IND-W vs SA-W: யூ-ட்யூப், பேஸ்புக் லைவ்
யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் மூலம் நேரலையாக ஸ்கோர்கார்ட் ஒளிப்பரப்படும், அதன் பின்னணியில் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் வர்ணனை குழு, வர்ணனையில் ஈடுபடும். நேரலையை உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விவரம் இருந்தாலோ, கருத்து கூற வேண்டும் என்றாலோ கமெண்ட் பிரிவில் கருத்திடலாம். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் எங்களின் வல்லுநர்கள் பதில் அளிப்பார்கள். போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் மூலம் நாங்கள் நேரலையில் வருவோம். அப்போது நேரலைக்கான யூ-ட்யூப் லிங்க், பேஸ்புக் லிங்க் இப்பக்கத்தில் இணைக்கப்படும். எனவே, அப்டேட்டுக்காக இப்பக்கத்துடன் இணைப்பிலேயே இருக்கவும்.
மேலும் படிக்க | மகளிர் உலகக் கோப்பை 2025: அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்.. லிஸ்ட்டில் இரண்டு இந்தியர்கள்!
மேலும் படிக்க | நவம்பரில் மட்டும் இத்தனை போட்டிகளா? இந்திய அணியின் முழு அட்டவணை!
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க… இந்திய அணி பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More