சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ.6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தலைமைச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதிதவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐவிசாரணை நடந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலானகுழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, தற்போதுசிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாகளில் வகுத்து சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்ேபரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ.6-ம் தேதி காலை 10.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். இதில் பங்கேற்று கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கடிதம் அனுப்பியுள்ளார்.