அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன?

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்கள், அனில் தலைமையிலான குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 24-ம் தேதி சோதனை நடத்தினர்.

அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தினர். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான பாலி ஹில்ஸ் வீடு உட்பட ரூ.3,083 கோடி மதிப்பு கொண்ட 42 சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் டெல்லி, நொய்டா, மும்பை, கோவா, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மகாராஜா ரஞ்சித் சிங் மார்க் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனில் அம்பானியின் அலுவலகமும் முடக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவிமும்பையில் திருபாய் அம்பானி அறிவுசார் நகரத்தில் உள்ள 132 ஏக்கர் நிலம் (ரூ.4,462.81 கோடி) முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தம் ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.