பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித் ஷா உட்பட பா.ஜ.க தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வரும் என்றும் காட்டாட்சி வரும் என்றும் கூறி பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெண்கள் உதவித்தொகை என்று கூறி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ‘பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது நிதீஷ் குமார் அரசு.
இதற்குப் போட்டியாக தேஜஸ்வி யாதவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு மகர சங்கராந்தியான ஜனவரி 14ம் தேதி ‘மாய் பெஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் வழங்குவோம். அதோடு விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நிதியுதவியை அறிவிப்பதில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14ம் தேதி நடைபெறுகிறது.