அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்வாடியிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அல்டாப் காத்ரி. இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். அண்மையில் வியாபாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி தனது வீட்டில் வைத்துவிட்டு தொழுகை செய்து கொண்டிருந்தார்.
இதையறியாமல் அவரது வயதான அத்தை, பழைய பிளாஸ்டிக் பை வீட்டில் இருப்பதைப் பார்த்து அதை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது பை இல்லாததைக் கண்டு பதறிய அல்டாப், தனது அத்தையிடம் விவரம் கேட்டுள்ளார். அப்போது அவர் பையை குப்பைத் தொட்டியில் வீசிய கதையை கூறியுள்ளார். இந்நிலையில், தெருவில் குப்பையை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர்கள் குப்பையை லாரியில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அல்டாப், அந்த லாரியை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று அந்த லாரியை கண்டுபிடித்து தொழிலாளர்களின் உதவியுடன் குப்பையை தரையில் கொட்டி பணத்தை மீட்டுள்ளார் அல்டாப்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “வீட்டில் பையை காணவில்லை என்ற விவரமறிந்து குப்பை அள்ளும் மாநகராட்சி ஊழியர்களை தொடர்புகொண்டேன். அவர்கள் உடனடியாக சூப்பர்வைசரின் செல்போன் நம்பரைக் கொடுத்து பேசுமாறு கூறினர். பின்னர் அந்த லாரியை நிறுத்தி, அதிலிருந்த குப்பையை தனியாகக் கொட்டி பணத்தைக் கண்டுபிடித்தேன்.
இதற்காக உதவிய அனைத்து மாநகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி. பாடுபட்டு சேர்த்த பணம் வீணாய் போகாது என்று உணர்ந்து கொண்டேன்.
வேன் டிரைவர் சுக்ராம் வசுனியா, உதவியாளர் திரு வனியா, சுற்றுச்சூழல் பொறியாளர் பிரஜேஷ் சோலங்கி ஆகியோரின் உதவியால்தான் பணம் கிடைத்தது. அவர்களுக்கு எனது நன்றி’’ என்றார்.