‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சுப்ரீம் கோர்ட்டு கவலை

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வக்கீல் ஆபத் ஹர்ஷத் போண்டா ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கற்பழிப்பு குறித்த சட்டங்கள், அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பாலியல் சமத்துவம், பெண்கள், சிறுமிகளுக்கான உரிமைகள், அவர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவை பற்றி விழிப்புணர்வை உறுதிசெய்ய பண்பு பயிற்சி சேர்க்கப்பட வேண்டும். சிறுவர்களின் மனநிலையை மாற்றும் நடவடிக்கைகள், பள்ளிக்கூட நிலையில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். கற்பழிப்பு குற்றம், அதற்கான தண்டனை, போக்சோ சட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசுக்கும், மத்திய கல்வி அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறோம். குடும்ப தகராறு, இளம் வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு போன்ற சம்பவங்களில் ‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ‘போக்சோ’ சட்ட பிரிவுகள் குறித்து சிறுவர்களிடமும், ஆண்களிடமும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 2-ந்தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.